ஜிஎஸ்டி விவகாரத்தில் ரஜினியின் மெளனம் ஏன்? டி.ராஜேந்தர்

  • IndiaGlitz, [Saturday,July 01 2017]

நாடு முழுவதும் இன்று முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திரைத்துறை உள்பட பல்வேறு துறைகள் இந்த புதிய வரிவிதிப்பால் பாதிப்படையும் என்று கூறப்படுகிறது. இதனால் வியாபாரிகள், தொழில் புரிபவர்கள், திரையுலகினர் உள்பட பலர் ஜிஎஸ்டிக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
ஜிஎஸ்டி வரியை எதிர்த்து திரையரங்குகள் வரும் திங்கள் முதல் காட்சிகளை ரத்து செய்துள்ளன. மேலும் கமல்ஹாசன் உள்பட திரையுலகினர் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜிஎஸ்டி வரி விவகாரத்தில் ரஜினி மௌனமாக இருப்பது ஏன் என்று டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'ஜிஎஸ்டி வரி குறித்து ரஜினி ஏன் குரல்கொடுக்கவில்லை. உங்களை வாழவைத்த திரையுலகத்துக்கு ஏன் குரல்கொடுக்கவில்லை? திரையுலகத்துக்கே குரல் கொடுக்காத ரஜினி, நாளை அரசியலுக்கு வந்தால் மட்டும் குரல்கொடுப்பாரா?' என்று சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.