ரூ.450 கோடி நஷ்டத்திலும் ஊழியர்களுக்கு கருணை காட்டிய சென்னை சில்க்ஸ்
- IndiaGlitz, [Friday,June 02 2017]
சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் ஏழு மாடிகளும் தீவிபத்தில் சாம்பலாகியுள்ளது. இந்த தீவிபத்தால் கடை உரிமையாளருக்கு சுமார் ரூ.450 கோடி நஷ்டம் என்று தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தீவிபத்து நடந்த மே 31ஆம் தேதி தான் அதில் பணிபுரியும் 1300 ஊழியர்களுக்கும் சம்பள நாள். இந்த மாதம் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுவதால் ஏற்படும் செலவை அன்றைய தினம் சம்பளம் வாங்கி தான் சமாளிக்க வேண்டிய நிலையில் ஊழியர்கள் இருந்தனர். ஆனால் திடீரென கட்டிடம் தீக்கிரையானதால் ஊழியர்கள் தங்களது சம்பளத்தின் நிலை குறித்து அதிர்ச்சி அடைந்தனர். அதுமட்டுமின்றி தங்களுடைய வேலை குறித்தும் ஊழியர்கள் அச்சம் அடைந்தனர். ஒருசில பெண் ஊழியர்கள் கண்ணீர் விட்டு அழுதததையும் பார்க்க முடிந்தது.
இன்று சம்பளம் நாள். இதை வாங்கிதான் ஸ்கூலுக்கு பீஸ் கட்ட நினைத்தோம். ஆனால் இப்படி ஆகிவிட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லையே என்று ஊழியர்கள் பலர் சோகத்துடன் இருந்த நிலையில் நேற்று ஜூன் 1ஆம் தேதி ஊழியர்களின் சம்பள பணம் முழுவதும் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி திருச்சி, மதுரை உள்பட சென்னை சில்க்ஸ் மற்றும் குமரன் நகை மாளிகை கடைகளுக்கு 1300 ஊழியர்களும் பிரித்து அனுப்பப்பட்டனர். சென்னையில் உள்ள சென்னை சில்க்ஸ் மீண்டும் கட்டப்படும் வரை அவர்கள் பல்வேறு கிளைகளில் வேலை செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ஒரு கடை தீப்பற்றி எரிந்துவிட்டாலோ அல்லது நஷ்டம் அடைந்துவிட்டாலோ, கடை உரிமையாளர்களிடம் இருந்து ஊழியர்கள் சம்பள பணத்தை பெற போராட வேண்டிய நிலை இருக்கும். ஆனால் சென்னை சில்க்ஸ் தங்களுடைய நஷ்டம் ஒருபுறம் இருந்தாலும் ஊழியர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட கூடாது என்று சம்பளத்தை சரியான தேதியில் வங்கியில் வரவு வைத்ததோடு, வேலையையும் உறுதி செய்துள்ளனர் என்பது பாராட்டுக்குரியதாக கருதப்படுகிறது.