“ஹன்டா“ வைரஸின் அறிகுறிகள்!!! பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன???
Send us your feedback to audioarticles@vaarta.com
சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்த சீனா 3 மாதங்களுக்குப் பின்பு நிம்மதி பெருமூச்சு வாங்கும் நேரத்தில் ஒரு புதிய வைரஸ் அங்கு மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சீனாவின் யுனான் மாகாணத்தில் இருந்து ஷான்டாண் மாகாணத்திற்கு பேருந்தில் பயணம் செய்த ஒருவர் திடீரென உடல்நலக் குறைவினால் உயிரிழந்தார். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், “ஹன்டா“ வைரஸ் தொற்றினால் உயிரிழந்ததாகத் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த வைரஸ் முதன்முதலாகத் உற்பத்தியானது அல்ல. முன்பே, 1950-1953 ஆண்டுகளில் “ஹன்டா“ வைரஸ் அமெரிக்கா மற்றும் தென்கொரிய இராணுவ வீரர்களிடையே பரவி சுமார் 3000 பேர்களை காவு வாங்கியது. தென் கொரியாவின் ஹன்டன் நதி கரைப்பகுதியில் இருந்து பரவியதால் “ஹன்டா“ என இந்த வைரஸ் பெயர் பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
"Ortho hanta Virus" வைரஸ் எனப்படும் “ஹன்டா“ வைரஸ் பொதுவாக எலிகளில் தொற்று நோயை ஏற்படுத்தும் தன்மைக்கொண்டவை. எலிகளிடம் இருந்து இந்த நோய் நேரடியாக மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. எலிகளின் சிறுநீர், உமிழ்நிர், மலம் ஆகியவற்றின்மூலம் இந்நோய்தொற்று மனிதர்களிடம் பரவுகிறது. 2005 மற்றும் 2019 இந்த வைரஸ் வட அமெரிக்காவில் மனிதரிடமிருந்து மற்ற மனிதர்களுக்குப் பரவும் தன்மைக் கொண்டிருந்ததை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினர்.
நோய் அறிகுறிகள்
ஃப்ளூ காய்ச்சலுக்கு இருக்கும் அறிகுறிகளைப் போன்றே “ஹன்டா“ வைரஸ் நோய்த்தொற்றிற்கும் அறிகுறிகள் காணப்படும். அதிகபடியான குளிர், தலை வலி, தசை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் நோய்தொற்று ஏற்பட்டவர்கள் முதலில் பாதிக்கப்படுவர். “ஹன்டா“ வைரஸை ஃப்ளூ காய்ச்சல், நிமோனியா காய்ச்சலில் இருந்து பிரித்துப் பார்ப்பதற்கு கடினமாகவும் இருக்கிறது. இந்நோய் தொற்று ஏற்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு சுவாசக்கோளாறு, நுரையீரல் பாதிப்பு, குறைந்த ரத்த அழுத்தம், இதயக் கோளாறுகளைப் படிப்படியாக ஏற்படுத்துகிறது.
“ஹன்டா“ வைரஸ் குடும்பத்தில் பல வைரஸ் வகைகள் உண்டு. இந்த வைரஸ்கள் எலிகளில் நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது. “ஹன்டா“ வைரஸால் பாதிக்கப்பட்ட எலிகளுடன் தொடர்பு இருந்தால் மட்டுமே இந்த நோய் மனிதர்களை தாக்கும். மலம், சிறுநீர், உமிழ்நீர் போன்றவற்றைத் துடைக்கும்போது, சுத்தப்படுத்தும் போது, எலிகள் தொட்ட பொருட்களைத் தொடும்போது என்றே இந்த வைரஸ் பரவுகிறது. மற்றபடி கொரோனா போன்று காற்றில் பரவும் தன்மை இதற்கு இல்லை. மிக அரிதாகவே மனிதரிடம் இருந்து மற்றவருக்குப் பரவுகிறது.
“ஹன்டா“ வைரஸில் இருந்து மாறுபடும் Andes Virus மனிதர்களிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கு பரப்பும் தன்மைக் கொண்டிருக்கும். வடக்கு அமெரிக்காவில் கடந்த 2005 இல் ஒருநபரிடம் இருந்து மற்ற நபருக்குப் பரவும் தன்மையுடன் இந்த வைரஸ் தொற்று மிக வீரியமாகவும் இருந்தது. சிலி மற்றும் அர்ஜென்டிணாவில் மிக அரிதாக மனிதரிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கு பரவியது என்பதும் குறிப்பிடத் தக்கது.
இலையுதிர் காலத்தில் மேற்கு அமெரிக்காவில் இந்த நோய்தொற்று பொதுவாகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கோடைக் காலத்தில் தெற்கு அமெரிக்கா, கனடாவில் இந்நோய் தொற்றினால் அதிக மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆசிய நாடுகளில் “ஹன்டா“ வைரஸில் இருந்து உருவாகும் வேறுவகையான நோய்த்தொற்றினால் கிட்னி, நுரையீரல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
பாதுகாப்பு நடவடிக்கை
வடக்கு அமெரிக்க மக்கள் தொகையில் 30% பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்து இருக்கின்றனர். எனவே மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு மிக அரிதாகவே பரவுகிறது என இந்த வைரஸ் தொற்றை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒவ்வொரு நாட்டின் வாழ்நிலை, சூழலைப் பொறுத்து இந்த வைரஸ் தொற்றுகள் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. காரணம் “ஹன்டா“ வைரஸில் பல வகைகள் காணப்படுகிறது.
நாம் வாழும் பகுதிகளில் எலிகளின் நடமாட்டம் இல்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். வீட்டையும் சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். அங்கு எலிகளின நடமாட்டம் இருக்கும்போது அந்தக் குப்பைகளை பாதுகாப்பான முறைகளில் அகற்ற வேண்டும். ஏனெனில் குப்பைகளில் எலிகளின் சிறுநீர், மலம், உமிழ்நீர் கலந்து இருக்கலாம். எனவே, நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள குப்பைகளைக் கையாளும்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சளி, இருமல், சுவாசக்கோளாறு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நலம். ஏனெனில் ஹன்டா“ வைரஸ் தொற்று இருப்பதைக் கண்டுபிடிக்கவே குறைந்தது 10 நாட்கள் பிடிக்கும். ஆனால் நோய்த்தொற்று பரவிய சிறிது காலத்திலேயே கடுமையான சுவாசக்கோளாறுகள் முதற்கொண்டு நுரையீரல் பாதிப்புகளை ஏற்படுத்தி மரணத்தை வரவழைத்துவிடும். நோய்த்தொற்றில் இருந்து விலகியிருக்க சுகாதாரமான முறைகளைக் கையாள வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments