தீக்குளிக்க முயன்றவரை தைரியமாக காப்பாற்றிய பெண் காவலர்கள்: வீடியோ எடுத்து வேடிக்கை பார்த்த பொதுமக்கள்!
- IndiaGlitz, [Monday,December 14 2020]
சாலையில் ஒரு விபத்து நடந்தாலோ அல்லது தற்கொலை முயற்சியில் ஒருவர் ஈடுபடும்போதோ சுற்றி நிற்பவர்கள் வேடிக்கை பார்ப்பதும், மொபைல் போனில் அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து லைக்ஸ்களை பெறுவதுமான கலாச்சாரம் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் நடந்த போராட்டம் ஒன்றில் திடீரென ஒருவர் தன் மீது மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த போது சுற்றிலும் இருந்தவர்கள் தங்கள் செல்போனில் அதனை வீடியோ எடுப்பதிலேயே குறியாக இருந்தனர்.
ஆனால் அங்கு வந்த பெண் போலீஸ் அதிகாரிகளான சிவகாமி மற்றும் சுகன்யா ஆகிய இருவரும் தங்கள் உயிரையும் பணயம் வைத்து அந்த நபரை காப்பாற்றினார்கள். பெண் காவலர்களின் இந்த சாமர்த்தியமான நடவடிக்கையை சைலேந்திரபாபு அவர்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்து இது குறித்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் டேக் செய்துள்ளார். மேலும் அந்தப் பெண் காவலர்களுக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்து உள்ளார்.
தற்கொலைக்கு ஒருவர் முயற்சி செய்யும்போது வீடியோ எடுப்பது என்ன வகை கலாச்சாரம் என்றும் அவர்கள் குடும்பத்தில் ஒருவர் யாராவது இவ்வாறு தற்கொலைக்கு முயன்றால் வேடிக்கை பார்த்துக்கொண்டு இப்படித்தான் வீடியோ எடுப்பார்களா? என்றும் நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்கு கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.