சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷின். விரைவில் அறிமுகம்

  • IndiaGlitz, [Thursday,December 01 2016]

பாரத பிரதமர் நரேந்திரமோடியின் ரூபாய் நோட்டுக்கள் குறித்த அதிரடி அறிவிப்பு நாட்டில் பல மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது. சில்லறை தட்டுப்பாடு காரணமாக சின்ன சின்ன கடைகளும் தற்போது ஸ்வைப் மிஷினுக்கு மாற ஆலோசித்து வருகின்றன. அதற்கேற்ப ஸ்வைப் மிஷின்களுக்கு மத்திய அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.
இந்நிலையில் டெபிட் கார்டு, மற்றும் கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்து சென்னையில் மெட்ரோ ரயில் டிக்கெட்டுக்களை எடுக்கும் வசதி விரைவில் வரவுள்ளது. இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த வசதி அமல்படுத்தப்பட உள்ளதாகவும் மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த முறை அமலுக்கு வந்தால் டிக்கெட் எடுப்பதற்காக மெட்ரொ ரயில் பயணிகள் வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்படுவதோடு சில்லறை தட்டுப்பாட்டு பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும். ஏற்கனவே ஸ்மார்ட் கார்டு மூலம் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் திட்டம் அமலில் உள்ள நிலையில் ஸ்வைப் மிஷின் மூலம் டிக்கெட் எடுக்கும் முறை அமலுக்கு வந்தால் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.