ஆர்.கே.நகர் தேர்தல் மீண்டும் ரத்தா? எஸ்.வி.சேகர் டுவீட்டால் பரபரப்பு
- IndiaGlitz, [Saturday,December 09 2017]
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து தற்போது தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் தினகரன் உள்ளிட்ட பல சுயேட்சைகளும் போட்டியிடுகின்றன
இந்த கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா அதிகம் இருந்த காரணத்தால் ரத்து செய்யப்பட்டது போலவே இந்த முறையும் ரத்தாகும் வாய்ப்பு இருப்பதாக நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
அவர் தனது டுவிட்டரில், 'விரைவில் அறிவிப்பு எதிர்பார்க்கலாம். “பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாததால் ஆர் கே நகர் தேர்தல் இரண்டாம் முறையாக ரத்து செய்யப்படுகிறது.” 2 முறை தொடர்ந்து தேர்தல் நடத்த முடியாத சட்டம் ஒழுங்கு கெட்ட சூழலில் தமிழக அரசு' என்று டுவீட் செய்து அந்த டுவீட்டில் சங்கு படம் ஒன்றை பதிவு செய்து விரைவில் சங்கு ஊதப்படும் என்பதை குறிப்பால் உணர்த்தியுள்ளார். எஸ்.வி.சேகரின் இந்த டுவீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபக்கம் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பணப்பட்டுவாடாவை தடுக்க தவறியது என்ற குற்றச்சாட்டுடன் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்னொரு பக்கம் எஸ்.வி.சேகர் இவ்வாறு டுவீட் செய்வதை பார்த்தால் உண்மையிலேயே தேர்தல் ரத்தாகுமோ? என்ற அச்சம் அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.