சத்யராஜை கன்னடர்கள் குறிவைப்பது ஏன்? எஸ்.வி.சேகர்
- IndiaGlitz, [Friday,April 21 2017]
காவிரி பிரச்சனையின்போது கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன் சத்யராஜ் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்யராஜ் மன்னிப்பு கேட்காவிட்டால் 'பாகுபலி 2' படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தன்னால் படத்தின் வியாபாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற பெருந்தன்மையில் சத்யராஜ் சற்று முன்னர் வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில் சத்யராஜ் மீது மட்டும் கன்னடர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறியபோது, சத்யராஜ் துவக்கம் முதல் தன்னை தமிழ் நடிகர் என அடையாளம் காட்டிக்கொண்டவர். அதனால் அவரை எதிர்க்கிறார்கள். வேறு சிலர் கர்நாடகா சென்றால் தன்னை கன்னடன் எனவும், ஆந்திரா சென்றால் தெலுங்கன் எனவும் பேசி தப்பிவிடுவார்கள் என்று கூறினார்.
மேலும் அவர் இதுகுறித்து கூறியபோது, 'சத்யராஜ் பெருந்தன்மையானவர். காவிரியில் இருந்து கர்நாடகா அரசு தண்ணீர் திறக்கவில்லை என்றால், விடவில்லை என்று தான் நாம் சொல்ல முடியும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கர்நாடகா அரசு மதிக்கவில்லை என்றால் மதிக்கவில்லை என்று தான் சொல்ல முடியும். அரசியல்வாதிகள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை கருத்துக்களை மாற்றிக்கொள்கிறார்கள். ஆனால் நடிகர் என்பதால் சத்யராஜை குறி வைக்கிறார்கள்.
சுமார் 9 வருஷத்துக்கு முன் சத்யராஜ் பேசியதற்கு பாகுபலி ரிலீஸ் நேரத்தில் எதிர்ப்பு தெரிவிப்பது, முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் மட்டுமே.
தமிழகத்தில் இருந்து மணல் செல்லாவிட்டால் கர்நாடகாவில் கட்டுமான தொழில் ஸ்தம்பித்துவிடும். அதே போல தமிழ் ஐடி ஊழியர்கள் அங்கிருந்து கிளம்பினால் என்னவாகும்? இதையெல்லாம் கர்நாடகா யோசிக்க வேண்டும்' என்று எஸ்.வி.சேகர் கூறினார்.