சபரிமலை விவகாரம்: கமல்ஹாசனை வம்புக்கு இழுத்த எஸ்.வி.சேகர்

  • IndiaGlitz, [Monday,October 22 2018]

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பை வழங்கியதில் இருந்தே இந்த விவகாரம் அரசியல் தலைவர்களால் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து கமல், ரஜினி உள்பட கருத்து சொல்லாத தலைவர்களே இல்லை எனலாம்.

இந்த நிலையில் சமீபத்தில் சபரிமலை விவகாரம் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கமல்ஹாசன், 'எனக்கு சபரிமலை நடைமுறைகள் குறித்து தெரியாது. நான் சபரிமலைக்கு சென்றதும் இல்லை. எனவே இதுகுறித்து என்னிடம் கருத்து கேட்பது சரியாக இருக்காது' என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வரும் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர்,  தனது சமூக வலைத்தளத்தில் கமல்ஹாசன் கூறிய கருத்தை கிண்டலடிக்கும் வகையில் அவர் நடித்த 'தசாவதாரம்' படத்தின் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். எஸ்.வி.சேகரின் இந்த கிண்டல் பதிவுக்கு வழக்கம்போல் சமூக வலைத்தள பயனாளிகள் எதிர்ப்பும் ஆதரவும் மாறி மாறி தெரிவித்து வருகின்றனர்.