ஒற்றுமையே உயர்வு: 'காட்மேன்' சீரியல் குறித்து தமிழ் நடிகரின் டுவீட்

  • IndiaGlitz, [Tuesday,June 02 2020]

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் டேனியல் பாலாஜி, ஜெயபிரகாஷ், சோனியா அகர்வால் உள்பட பலர் நடித்த ’காட்மேன்’ என்ற வெப்தொடர் வரும் 12ம் தேதி ஜீ டிவியில் ஒளிபரப்பாக இருந்த நிலையில் இந்த தொடர் ஒளிபரப்பாகாது என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

‘காட்மேன்’ தொடரின் டீசர் சமீபத்தில் வெளியான போது இந்த தொடரில் சர்ச்சைக்குரிய காட்சிகள் பல இருப்பதாகவும், குறிப்பாக ஒரு குறிப்பிட்ட மதம் மற்றும் சமூகத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் இருப்பதாகவும் ஏகப்பட்ட புகார்கள் குவிந்தன. இது குறித்து காவல்துறையிடம் புகார் மனுக்கள் பதிவு செய்யப்பட்டன. இதனை அடுத்து காவல் துறை எடுத்த அதிரடி நடவடிக்கையால் இந்த வெப்த்டொஅரின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த இந்தத் தொடரில் பணிபுரிந்த அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில்தான் ஜீ டிவி, ‘காட்மேன்’ தொடர் வரும் 12ஆம் தேதி ஒளிபரப்பாகாது என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு குறித்து தனது டுவிட்டரில் கருத்து கூறிய நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் அவர்கள் கூறியதாவது:

இந்துக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட காட்மேன் இனி ஒளிபரப்பாகாது. சம்மந்தப்பட்ட அனைவரின் மீதும் வழக்கு பதியப்பட்டுவிட்டது. சரியான முறையில் கம்ப்ளைண்ட் டிராப்ட் செய்து கொடுத்த சீனியர் வழக்கறிஞர் குமரகுரு அவர்களுக்கும் ஒற்றுமையுடன் ஒரே சிந்தனையுடன் பயணித்த, ஜாதி வேறுபாடின்றி ஆதரித்த அனைத்து இந்து சகோதரர்களுக்கும், மாற்று மத சகோதரர்களுக்கும் என் நன்றிகளும் வாழ்த்துக்களும். இதன் நீதி தனிமரம் தோப்பாகாது. ஒற்றுமையே உயர்வு’ என்று பதிவு செய்துள்ளார். எஸ்வி சேகரின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.