டார்ச்லைட் இருந்தால் போதுமா, பேட்டரி வேண்டாமா? கமல்ஹாசனை கலாய்த்த பாஜக பிரமுகர்

உலக நாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘பிரதமர் விளக்கேற்ற சொன்னது குறித்து கூறியபோது, ‘பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்’ என்று தெரிவித்தார். கமலின் இந்த கருத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கு நகைச்சுவை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘சில சமயம் நம்ம படத்துல அதிகம் எதிர்பார்த்து ஏமாந்தது மாதிரி இல்ல இது. வெறும் டார்ச்லைட் கையில இருந்தா போதாது. அது பிரகாசமா எரிய பாட்டரி தேவை. அதுதான் நம் பிரதமர். இந்த 21 நாள் தேசத்திற்கே ஊரடங்கு. இதில் அரசியல் எதற்கு? உங்கள் ஆலோசனைகளை பிரதமரிடமே தெரிவிக்கலாமே’ என்று தெரிவித்தார்.

எஸ்.வி.சேகரின் இந்த பதிலுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுக்கள் வழக்கம்போல் பதிவாகி வருகிறது.