ரஜினி-கமல்-விஜயகாந்த்-பாஜக கூட்டணி: ஒரு நடிகரின் யோசனை

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒன்றரை வருடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இப்போதே அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. குறிப்பாக கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பிரசாந்த் கிஷோர் கூறிய ஒரு முக்கிய ஆலோசனையை கமலஹாசன் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், இதனால் இனி பிரசாந்த் கிஷோர் கமல் கட்சிக்கு ஆலோசனை வழங்கப்போவதில்லை என முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதாவது டிடிவி தினகரன் உள்பட ஒரு சிலருடன் இணைந்து கமல்ஹாசன் செயல்பட வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியதை கமல்ஹாசன் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் ஊழல் கறைபடிந்தவர்களுடன் தான் இணைந்து பணியாற்ற போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த செய்தியை மேற்கோள்காட்டி நடிகருமான பாஜக பிரமுகருமான எஸ் வி சேகர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘கமலஹாசன் அவர்களே! இந்த செய்தி உண்மை என்றால் உங்களுக்கு எனது பாராட்டுக்கள் ஊழல் இல்லாத பாசிட்டிவ் எண்ணங்கள் கொண்ட ரஜினி, கமல், விஜயகாந்த் மற்றும் பாஜக கூட்டணி சேர்ந்தால், மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார் .

எஸ்வி சேகரின் இந்த அழைப்பிற்கு கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் உடன்படுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.