Suttupidikka Uththaravu (aka) Suttu Pidikka Utharavu Review
சுட்டுப்பிடிக்க உத்தரவு: சுறுசுறுப்பான ஆக்சன் த்ரில்லர்
'போக்கிரி ராஜா' படத்தை அடுத்து இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியிருக்கும் திரைப்படம் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு'. இந்த முறை முன்னணி நடிகர்களை தவிர்த்து இயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன் மற்றும் விக்ராந்த் ஆகியோர்களை நம்பி களமிறங்கியுள்ள இயக்குனர் ரசிகர்களை திருப்தி செய்தாரா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.
விக்ராந்த்தின் குழந்தை மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த அறுவை சிகிச்சைக்கு ஒரு பெரிய தொகை தேவைப்படுவதால் வேறு வழியின்றி நண்பர்கள் சுசீந்திரன் குழுவினர்களுடன் சேர்ந்து ஒரு வங்கியை கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர். ஒரு பெரிய தொகையை கொள்ளையடித்துவிட்டு காரில் திரும்பும்போது ஒரு ஸ்லம் ஏரியாவில் கார் விபத்துக்குள்ளாகிறது. எனவே அந்த ஸ்லம் ஏரியாவை போலீஸ் சுற்றி வளைக்கின்றது. அந்த ஏரியாவில் இருந்து விக்ராந்த், சுசீந்திரன் குழுவினர் தப்பித்தார்களா? போலீஸ் அவர்களை பிடித்தார்களா? என்பதையும் தாண்டி கடைசி இருபது நிமிடங்களில் ஒரு மிகப்பெரிய சஸ்பென்ஸ் உடைகிறது. அது என்ன சஸ்பென்ஸ் என்பதை திரையில் பார்க்கவும்.
விக்ராந்த், மிஷ்கின், சுசீந்திரன் மூவருக்கும் கிட்டத்தட்ட சம அளவிலான கேரக்டர்கள். போலீஸ் அதிகாரியாக மிஷ்கின் மிரட்டியுள்ளார். கடுமையான காயத்தில் இருந்தபோதும் டாக்டர் சொல்வதையும் மதிக்காமல் அவர் வங்கி கொள்ளையர்களை பிடிக்க செய்யும் முயற்சியில் மனதை கவர்கிறார். ஸ்டண்ட் காட்சிகளிலும் மிரட்டுகிறார்.
ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் என மாறி மாறி நடிக்கும் வாய்ப்பு விக்ராந்துக்கு. கிடைத்த வாய்ப்பை சரியாகவே பயன்படுத்தியுள்ளார்., சுசீந்திரன் இனி முழு நேர நடிகராக மாறிவிடலாம் என்ற அளவிற்கு இயல்பான நடிப்பு.
படத்தில் அதுல்யா ரவி ஹீரோயின் என்றாலும் ரொமான்ஸ், பாடல் காட்சிகளுக்கெல்லாம் வேலையே இல்லை. மீடியாக்காரர்களுடன் இவர் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள், ரிஸ்குகள் படத்தின் விறுவிறுப்பை குறைத்தாலும் இந்த காட்சிகள் ரசிக்கும் வகையில் தான் உள்ளது. போலீஸ் கேரக்டரில் நடித்துள்ள பிள்ளையார் ருத்ரு நடிப்பு சூப்பர். ஆரம்பம் முதல் அப்பாவி போலீஸாக நடித்து ஏரிச்ச்லூட்டும் இவரது கேரக்டர் கிளைமாக்ஸில் பொங்கி எழுவது ஆச்சரியம்.
ஜேக்ஸ் பிஜாய் இசையில் பாடல்கள் இல்லை என்றாலும் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார். கோவையின் ஒரு ஸ்லம் பகுதியில்தான் படத்தின் பெரும்பாலான காட்சிகள் உள்ளது. ஒளிப்பதிவாளர் சுஜித் சரங் சந்துபொந்துகளில் எல்லாம் புகுந்து விளையாடியுள்ளது. படத்தின் விறுவிறுப்புக்கு எடிட்டர் ராமராவ் பங்கும் மிகப்பெரியது.
இயக்குனர் ராம்பிரகாஷ் முதல் பாதியில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்களுடன் கதையை நகர்த்தியுள்ளார். இரண்டாம் பாதியிலும் கிட்டத்தட்ட அதே கோணத்தில்தான் படம் செல்கிறது. ஆனால் அனைத்து லாஜிக் மீறல்களுக்கும் அவர் கடைசி இருபது நிமிடங்களில் சொல்லும் விளக்கம் ஆச்சரியப்பட வைக்கின்றது. கமர்ஷியலுக்காக பாடல்கள், காமெடி காட்சிகள் இணைக்காமல் இருந்ததற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள். இருப்பினும் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் நடக்கும் துப்பாக்கி சண்டை, அதில் உயிரிழக்கும் பொதுமக்கள், அதனை படம்பிடித்து ஒளிபரப்பி வரும் மீடியாக்கள் ஆகியவைகளை எல்லாம் தாண்டி, இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அவர் கடைசியில் தரும் விளக்கம் நம்பும்படி இல்லை. இதேபோல் இந்த படத்தில் உள்ள மேலும் சில சந்தேகங்களை எழுப்பினால் படத்தின் சஸ்பென்ஸ் உடைபடும் என்பதால் இத்துடன் நிறுத்தி கொள்வோம்.
மொத்தத்தில் கடைசி இருபது நிமிட காட்சிகள் படத்தை தூக்கி நிறுத்தி விடுகிறது என்பதும், ஒரு ஆக்சன், எமோஷன், த்ரில்லர் படம் பார்த்த திருப்தி தியேட்டரில் இருந்து வெளியே வரும்போது கிடைக்கும் என்பதும் உண்மை.
- Read in English