மும்பை மக்களுக்கு வழங்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தற்காலிகமாக நிறுத்தம்!!! காரணம் என்ன???
- IndiaGlitz, [Thursday,April 30 2020]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா இருந்துவருகிறது. மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பை மிகவும் நெருக்கமான கட்டிட அமைப்பை கொண்ட ஒருநகரம். நகரின் மையப்பகுதி மட்டுமல்லாது ஒட்டுமொத்த மும்பையிலும் நெருக்கமான சூழலில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தாராவி போன்ற பகுதிகளில் சமூக விலகலைக் கடைபிடிப்பது கடினம் என்பதால் அம்மாநில சுகாதாரத்துறை அம்மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தைக் கொடுக்கவுள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டது.
அதன்படி, தாராவி போன்ற நெருக்கமான பகுதிகளில் வாழும் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டும் வந்தது. சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நெருக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் கொரோனா முன்னெச்சரிக்கையாக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் வழங்கப்பட்டு வந்தது. இதுகுறித்து அம்மாநில அரசு இம்மருந்தின் செயல்திறனை சோதிக்க ஒரு மருத்துவ ஆய்வையும் மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவித்து இருந்தது. தற்போது வல்லுநர்கள் இந்த மருந்து ஏற்படுத்தும் பக்கவிளைவுகளை குறித்து கேள்வியெழுப்பியுள்ளனர். மேலும் செயல்திறனற்ற இம்மருந்து எதற்காக மக்களுக்கு வழங்கப்படுகிறது எனவும் கேள்வியெழுப்பப் பட்டது.
மும்பையின் துணை சுகாதாரத்துறை நிர்வாக அதிகாரி தஷா ஷா “தற்போது ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை பரிசோதனை செய்ய இந்திய மருத்துவக் கழகத்தின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறோம் எனவும் அதுவரை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அறிவுரையின்படி செயல்படுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்களுக்கு வழங்கப்படும் இம்மருந்து தற்காலிகமாக நிறுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ்க்கு எதிராக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மிகச் சிறப்பாக செயல்படும் எனவும் கூறியதிலிருந்து இம்மருந்து உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. பல நாடுகளில் இம்மருந்தை இறக்குமதி செய்துகொள்ளவும் முன்வந்தனர். ஆனால் மருத்துவ நிபுணர்கள் இம்மருந்து மலேரியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஒரு தடுப்பு மருந்து எனவும் நோயில்லாத நேரங்களில் பயன்படுத்தினால் பல கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் முன்னதாக எச்சரித்து இருந்தனர்.
இந்நிலையில்தான் மகாராஷ்டிராவின் சுகாதாரத்துறை கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நெருக்கமான பகுதிகளில் வாழும் மக்களுக்கு இம்மருந்து வழங்கப்படும் என மார்ச் 22 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி மும்பையில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட பலரும் இம்மருந்தை எடுத்துக்கொண்டனர். காவல் துறையினருக்கும் வழங்கப்பட்டது.
தற்போது விஞ்ஞானிகள் இந்த மருந்து கொரோனாவுக்கு எதிராக செயல்படும் என்று சொல்வதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா பாதித்த நோயாளிகளுக்குக் கூட முழுமையான நன்மையை ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தரவில்லை எனவும் கூறுகின்றனர். ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் அமெரிக்க இராணுவப் படைவீரர்கள் 368 பேருக்கு இம்மருந்து சோதனைக்காக வழங்கப்பட்டது. ஆனால் நோய்க்கு எதிரான பலனை விட இறப்புகள் அதிகமாக நிகழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா சிகிச்சைக்கு எந்த மருந்துகளும் 100 விழுக்காடு முழுமையான பலனை அளிக்காத போது கடைசி நம்பிக்கையாக சில மருந்துகளை தலைவர்கள் கூறுகின்றனர். அதை மக்களும் முழுயைமாக நம்பிவிடுகின்றனர். தற்போது மகாராஷ்டிராவில் முன்னெச்சரிக்கையாக வழங்கப்பட்ட இச்செயல் மிகைப்படுத்தப்பட்ட கற்பனை என்று மகாராஷ்டிராவின் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஸ்ரீபிரகாஷ் கலந்த்ரி எச்சரித்துள்ளார்.