close
Choose your channels

மும்மூர்த்திகள் அருள் புரியும் சுசீந்திரன் கோவில் – தொன்ம, வரலாற்று கதை

Saturday, February 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மும்மூர்த்திகள் அருள் புரியும் சுசீந்திரன் கோவில் – தொன்ம, வரலாற்று கதை

 

கன்னியாக்குமரி செல்பவர்கள் போகிற போக்கில் தலைக்காட்டி விட்டு வரலாம் என்ற விதத்திலாவது சுசீந்திரம் தாணுமலாயக் கோவிலைத் தரிசித்துவிட்டு வருவர். கன்னியாக்குமரி – நாகர் கோவில் சாலையில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இத்தலம், கோவில் வரலாற்றிலேயே முக்கியத்துவம் கொண்டது. மும்மூர்த்திகளுள் யார் பெரியவன் என்று சண்டை போடும் புராணக் கதையை நாம் கேட்டிருப்போம். இங்கு மூவரும் இணைந்து அருள் பாலிப்பதுதான் சிறப்பான விஷயமாகவே கருதப் படுகிறது. தாணு- சிவன், மால்- விஷ்ணு, அயன்-பிரம்மா என்று முப்பெரும் கடவுளர்களும் ஒன்றன் பின் ஒன்றாக நின்று இத்தலத்தில் காட்சி தருகின்றனர்.

இந்திரனின் சாபம்

கௌதம முனிவரின் மனைவி அகலிகை பேரழகு படைத்தவள். இந்திரனுக்கு அவளை அடைய வேண்டும் என்பது ஆசை மட்டும் அல்ல, வெறியே இருந்தது. அகலிகையை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்த இந்திரன் பூமிக்கு வந்து அகலிகையின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்கிறார். நடு இரவில் உறங்கி கொண்டிருந்த கௌதம முனிவரை அகலிகையிடம் இருந்து பிரிக்க நினைத்து சேவல் கூவுவது போல சத்தம் எழுப்பினார். இதை நம்பிய கௌதமர் சந்தியாவதனம் செய்வதற்கு ஆற்றங்கரைக்கு செல்கிறார். அங்கு சென்றவுடன் ஆறு அமைதியாக காட்சி தருகிறது. சூரியனும் உதிக்கவில்லை. உடனே அதிர்ச்சியாகி தனது ஞான திருஷ்டியால் தனது வீட்டைப் பார்க்கிறார்.

தான் இருக்க வேண்டிய இடத்தில் இந்திரன் அகலிகையுடன் உடலுறவு கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். ஆத்திரத்துடன் வீடு வந்த கௌதமர் இந்திரனுக்கு உடல் முழுவதும் ஆயிரம் கண்ணாக மாறட்டும் என்று சாபம் கொடுக்கிறார். இந்தக் கதையை நாம் அனைவரும் கேட்டிருப்போம். உண்மையில் ஆயிரம் கண் என்பது மனிதக் கண்கள் அல்ல, பெண் உடல் உறுப்பான யோனியைத்தான் குறிக்கும். கௌதமர் அப்படித்தான் முதலில் சாபம் கொடுத்திருக்கிறார்.

பின்பு, ஆயிரம் யோனிகளை உடலில் வைத்துக் கொண்டு வெளியே நடமாட முடியாமல் இருந்த இந்திரன் வெட்கி தனது இடத்திலேயே தங்கி விடுகிறார். இதைக் கேள்வியுற்ற சிவனும், விஷ்ணுவும் தண்டனையை குறைக்குமாறு வேண்டவே, யோனிகள் கண்களாக மாறட்டும் என்று தனது சாபத்தைக் குறைத்துக் கொள்கிறார் கௌதமர். உடல் முழுவதும் வேதனை அளிப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இருந்த இந்திரன் சுசீந்திரத்தில் மூன்று தெய்வங்களை வழிபட்டு சாபத்தை நீக்கிக் கொண்டதாக தல வரலாறு சொல்லப் படுகிறது.

ஸ்ரீஇந்திரம்

சுசி – என்றால் தூய்மை. சுசீந்திரத்திற்கு வந்து வழிபட்டதால் தேவேந்திரன் சாபம் நீங்கி தூய்மை பெற்றான். இந்திரனின் சாபம் நீங்கிய தன்மையை உணர்த்தும் விதமாகவே இத்தலத்திற்கு சுசீந்திரன் எனப் பெயர் வந்ததாகக் குறிப்பிடுவர். மூன்று தெய்வங்களையும் இந்திரனே ஒன்றாக இணைத்து வைத்து வணங்கியதாகவும் சொல்லப் படுகிறது.

ஆனால், உண்மையில் அகலிகை பற்றிய குறிப்புகளோ, அல்லது சிலையையோ இத்தலத்தில் காணமுடியவில்லை. இதன் பழைய பெயர் “ஸ்ரீஇந்திரன்” என்று ஒரு கல்வெட்டு செய்தி குறிப்பிடுகிறது. பழந்தமிழில் ஸ்ரீஇந்திரம் - சிவித்திரம் என்று மருவி (உருமாறி) பின்னர் சுசீந்திரன் ஆனது எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கி.பி. 941 ஆம் ஆண்டின் கல்வெட்டு ஒன்று ஸ்ரீஇந்திரம் என்ற பெயரிலேயே இத்தலத்தைக் குறிப்பிட்டு இருக்கிறது. கி.பி. 1471 ஆம் ஆண்டு வெளியிடப் பட்ட தலப் புராணத்தில்தான் தாணுமாலயன் என்ற பெயர் முதன் முதலாக பயன்படுத்தப் பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

வரலாற்று ஆவணம்

சுசீந்திரம் என்பது பல கோயில்கள் இணைந்து ஒரு தொகுப்பு என்றே சொல்ல வேண்டும். இக்கோவில் அமைப்பினைக் குறித்தும், வரலாறினை குறித்தும் கே.கே. பிள்ளை அவர்கள் விரிவாக ஆய்வு செய்து இருக்கிறார்.

கோவிலின் மையக் கட்டிடத்திற்கு முன்பு உள்ள ”நங்கை” (காளி) தெய்வம் தான் ஆதிக் கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்திரன் சாபம் போக்கிய புராணக் கதையிலும் காளி தெய்வமே சாபம் போக்கியதாகச் சொல்லப் படுகிறது. பின்னால் உள்ள பாறையில் சிவன் கோவில், மையப் பகுதியில் உள்ள பெருமாள் கோவில், சிற்பங்கள் போன்றவை பின்னாட்களில் உருவாக்கப் பட்டு இருக்கின்றன. இத்தலத்தின் ராஜகோபுரம் திருவிதாங்கூர் மன்னன் பேச்சிப்பாறை அணையைக் கட்டும் போது உருவாக்கி இருக்கிறான். அதற்கு முன்னர் வெறுமனே அஸ்திவாரம் மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

1929 இல் கோபுர வேலைப்பாடுகளுக்கு இடையே ஒற்றைக் கல்லால் ஆன அனுமார் சிலை ஒன்று கண்டுபிடிக்கப் பட்டது. இச்சிலை தற்போது, திருமாலின் சன்னக்கு எதிரே வைக்கப் பட்டு வழிபடப் படுகிறது.

கொன்றை மரம்- தலப் புராணம்

இத்தலத்தில் உள்ள கொன்றை மரம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஞானரண்யம் என்ற பழைய பெயருடைய இவ்விடத்தில் அத்திரி முனிவரும் அவருடைய மனைவி அனுசுயாவும் தவம் மேற்கொண்டனர். அத்திரி முனிவர் இமய மலைக்கு செல்லவே, அனுசுயா மட்டும் தனித்து இருந்தார். அந்நேரத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும் சேர்ந்து அனுசுயாவின் கற்பினை சோதிக்க முடிவெடுத்து, பிராமண வேடம் அணிந்து அனுசுயாவிடம் யாசகம் கேட்டனர். மூவரையும் வரவேற்ற அனுசுயா உணவு பரிமாறினார். அப்போது, “ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்படுமாயின் உணவு உண்ண ஆகாது” என கூறவே அனுசுயா அதிர்ந்து போனார்.

தனது கணவரின் திருவடிகளை கழுவிய நீரை மூவரின் மீது தெளித்தார் அனுசுயா. உடனே மூன்று கடவுள்களும் பச்சிளம் குழந்தைகளாக மாறிப்போயினர். அந்த குழந்தைகளுக்கு சோறு ஊட்டி, தாலாட்டி, தூங்க வைத்து பாதுகாத்து வந்தார். மூப்பெரும் கடவுளர்களின் மனைவிமார்களும் இதைக் கேள்விபட்டு, அனுசுயாவிடம் தங்களது கணவனை திருப்பிக் கொடுக்குமாறு கேட்கவே பழைய உருவத்திற்கு மற்றினாளாம்.

தவம் செய்து விட்டு திரும்பி வந்த அத்திரி முனிவர் தனது மனைவியுடன் ஆற்றங்கரைக்கு பக்கத்தில் உள்ள கொன்றை மரத்தின் அடியில் இருந்து வணங்கவே மூன்று கடவுளர்களும் காட்சி அளித்தனர். அத்திரி முனிவரும் அனுசுயாவும் அருள் பெற்றதை நினைவுப்படுத்தவே தாணுமாலயன் கோவில் கட்டப் பட்டதாக தல வரலாறு குறிப்பிடுகிறது. இந்திரன் சாபம் போக்கியது, அத்திரி – அனுசுயா அருள் பெற்றது என இரண்டு புராணக் கதைகள் இக்கோவிலின் தோற்றத்திற்குச் சொல்லப் படுகிறது.

பழைய வழிபாடு

சோழர் காலம் வரை இத்தலத்தில் தொன்மையான தமிழர்கள் வழிபாடு செய்யப் பட்டு இருக்கிறது. பின்னர் கேரள மன்னர்களின் அரசாட்சியைத் தொடர்ந்து ஆகம வழிபாட்டு முறை அறிமுகமாகி இருக்கிறது. தாந்தீரிக முறை (ஆண்/பெண் இணைப்புக்கு முக்கியத்துவம் கொண்ட பழைய தத்துவ முறை) யிலும் சில காலம் இந்தக் கோவிலில் வழிபாடு மேற்கொள்ளப் பட்டுள்ளன.

சொல் வழக்கு – சுசீந்திரம் கைமுக்கு

இந்திரன் பாலியல் வழக்கிற்குத் தான் தண்டனை பெற்று அந்தச் சாபத்தை இந்தக் கோவில் போக்கிக் கொண்டான். அதனை நினைவுப்படுத்தும் தாணுமலாயன் தலத்தில் அன்றைய கேரள மன்னர்கள் வித்தியாசமான ஒரு தண்டனையை வழங்கியிருக்கிறார்கள். பாலியல் குற்றங்களில் தொடர்புடைய குற்றவாளிகளின் கைகளை கொதிக்கின்ற எண்ணெய் கொப்பரைகளில் வைத்து அமுக்கி இருக்கிறார்கள். இதைப் பற்றிய செய்திகள் கோவில் கல்வெட்டுக்களில் செதுக்கப் பட்டுள்ளன.

வரலாற்று முக்கியத்துவம்

சுசீந்திரம் கோவில் வெறுமனே புராணக் கதைகளுக்காக மட்டும் பெயர் பெற்றது என்று நினைத்துவிட முடியாது. பழைய கடற்கரையில் இருந்து சுசீந்திரம் கோவில் வரை ஒட்டியப் பகுதியில் மணக்குடி காயல் துறைமுகம் மிகவும் சிறப்பான வணிகத் தலமாக செயல்பட்டு இருக்கிறது. சுசீந்திரம் ஒட்டிய கோட்டாறு ஒரு மிகப்பெரிய சந்தையாகவும், வணிகத் தலமாகவும் விளங்கி இருக்கிறது. இவை அனைத்தும் கோவிலை ஒட்டிய பொருளாதார மண்டலங்களாகவே இருந்தது என்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர்.

கோவில் நிவந்தங்கள்

தாணுமாலயன் கோவில் என்பது நிவந்தங்களாக அளிக்கப் பட்ட ஒரு பகுதி என்பதை கல்வெட்டு செய்திகள் உறுதிப் படுத்துகின்றன. (நிவந்தங்கள் – பிராமணர்களுக்கும், வேள்விகளில் ஈடுபட்டவர்களுக்கும் அன்றைய காலத்தில் அரசாண்ட மன்னர்கள் சில ஊர்களுடன் கோவில் வருவாயையும் தானமாக அளித்து விடுவார்கள்) தானமாகக் கிடைக்கப் பெற்ற ஊர்களில் வரும் வருவாயையும், கோவில் வருமானத்தையும் அனுபவிக்கும் உரிமையை பிராமணர்களே எடுத்துக் கொள்ளலாம்.

இத்தலத்தை ஒட்டிய நிலப்பகுதி முழுவதும் வளமான நெல் விளையும் இடங்களாக இருந்திருக்கிறது. 12 வருவாய் பகுதிகள் கோவிலில் வைத்தே நிர்வாகம் செய்யப் பட்டு இருக்கின்றன. பிரிட்டிஷ் ஆட்சி காலம் வரை இந்த நடைமுறை தொடர்ந்து இருக்கிறது. கோவில் சொத்துடைய நிறுவனங்களாக விளங்கிய ஒரு காலக் கட்டத்து வரலாற்று ஆவணமாகவே சுசீந்திரம் விளங்கி இருக்கிறது எனலாம். மேலும், பஞ்ச காலங்களில் சேமிப்பு கிடங்காகவும் இத்தலம் விளங்கியது.

சிலை

சிவன், திருமால், பிரம்மா என்று மூன்று தெய்வங்களும் இடம் பெற்றிருந்தாலும் மையச்சிலை என்பது லிங்கம்தான். மூவருக்குள் யார் பெரியவன் என்ற போட்டி போடுகின்ற புராணக் கதையிலும் சிவனைத் தவிர்த்த திருமாலும், பிரம்மாவும் தான் போட்டியில் கலந்து கொள்கின்றனர். அப்படியெனில் சிவன் மையமானக் கடவுளாகவும் முழுமுதற் கடவுளாகவும் வளர்ச்சி பெற்ற (அல்லது) உருவாக்க பட்ட ஒரு காலக் கட்டத்தில் இத்தலம் கட்டப் பட்டு இருக்க வேண்டும்.

சிற்பக் கலை

பல மண்டபங்களையும் சிற்பங்களையும் கொண்ட ஆற்றங்கரை புராதனமாகவே இத்தலம் காட்சி அளிக்கிறது. இவ்விடத்தில் பல மண்டபங்களும் கோபுரங்களும் தொகுப்பாக இணைக்கப் பட்டுள்ளன.

இக்கோவிலில் நாயக்கர் கால சிற்பக் கலைகள் மிகவும் சிறப்புடையது ஆகும். இங்குள்ள வீரபத்திர சிலை, குறவன் குறத்தி சிலைகள் போன்றவை பற்றிய ஆய்வுகள் நிகழ்த்தப் பட்டுள்ளன. கோவில் கோபுரம் 134 அடியும், 18 அடியில் அனுமான் சிலையும், 13 அடியில் நந்தி சிலையும் இத்தலத்தின் சிறப்பம்சங்களாகும். கணபதி பெண் உருவத்தில் அமைக்கப் பட்டுள்ளது. விக்னேசுவரி என்றே இதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்குள்ள நவகிரகம் ஒரே சிலையால் அமைக்கப் பட்டுள்ளது சிறப்பு வாய்ந்ததாகும். இத்தலத்தில் உள்ள ஓவியங்கள் அனைத்தும் 115 வகையான மூலிகை சாற்றினைக் கொண்டு வரையப் பட்டுள்ளன.

வழிபாடுகள்

சித்திரை தெப்பத் திருவிழா, ஆவணி பெருநாள், மார்கழி திருவிழா, மாசி திருக்கல்யாண திருவிழா போன்றவை முக்கிய விழாக்களாக அனுசரிக்கப் படுகின்றன. புதுமணத் தம்பதிகள் இத்தலத்திற்கு சென்று வழிபடுவதை முக்கியச் சடங்காகவே கடைப்பிடித்து வருகின்றனர்.

கோயில் நுழைவுப் போராட்டம்

கேரள மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த காலக்கட்டத்தில் அனைத்து சமூகத்தவர்களும் இக்கோவிலில் நுழைய அனுமதி கேட்டு பல போராட்டங்களை முன்னெடுத்து இருக்கின்றனர். 1916 இல் முதன் முதலாக ஆரம்பித்த போராட்டம், 1924 ஆம் ஆண்டில் பெரியாரின் தலைமையில் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது. 1930 இல் நடைபெற்ற கிளர்ச்சிக்குப் பின்னர் திருவிதாங்கூர் மகாராஜா 1936 இல் அனைத்துச் சாதியினரும் நுழைவதற்கான அனுமதியை வழங்கி இருக்கிறார்.

தொன்மக் கதைகளையும் வரலாறுகளையும் தன்னுள் தேக்கி வைத்துக்கொண்டு, இந்து மதத்தின் வலிமையை பறை சாற்றும் வண்ணம் பல நூற்றாண்டுகளைத் தாண்டி நிற்கும் தாணுமாலயன் கோவில் உண்மையில் ஒரு ஒற்றுமையின் அடையாளம் தான். தொன்மத்தில் இருந்து ஜனநாயகத்தையும் கொடுத்திருக்கும் முக்கிய இடமாகவும் இத்தலம் விளங்கி நிற்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment