ஜனவரி 1, பல குடும்பங்கள் மறக்க நினைக்கும் நாள்: சுசீந்திரன்
- IndiaGlitz, [Sunday,December 31 2017]
2017ஆம் ஆண்டு முடிவடைந்து இன்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு புதிய ஆண்டான 2018ஆம் ஆண்டு பிறக்கவுள்ள நிலையில், உலகில் உள்ள அனைவரும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல இயக்குனர் சுசீந்திரன் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு, இந்த நாள் பல குடும்பங்கள் மறக்க நினைக்கும் நாள் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
எத்தனையோ குடும்பங்கள் மறக்க நினைக்கும் ஒருநாள் எதுவென்றால் ஜனவரி 1
ஏன் என்றால் அன்றைய தினம் மட்டும் குறிப்பாக இரவு நேர கார் மற்றும் பைக் பயணத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை வெகு அதிகம். தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் ஜனவரி 1 தேதி வரப்போகிறது, புத்தாண்டு வரப்போகிறது. இந்த வார்த்தை அவர்கள் கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருக்கும். அந்த நாளில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் நினைவில் டிவியை ஆஃப் செய்து நல்ல உணவு கூட செய்யாமல் தன் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
என சகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள். உங்கள் குடும்பத்தை அனாதையாக்கி விடாதீர்கள். புத்தாண்டை கொண்டாடுங்கள், கொஞ்சம் ஜாக்கிரதையாக கொண்டாடுங்கள். இந்த புத்தாண்டு எந்த குடும்பத்திற்கும் சோகமான ஆண்டாக அமைந்து விடக்கூடாது என்று உலகத்தில் உள்ள அனைத்து கடவுள்களையும் வேண்டிக்கொள்கிறேன்' என்று சுசீந்திரன் கூறியுள்ளார்.