நல்லவன் எவன் வந்தாலும் நமக்கு நல்லது: விஷாலின் அரசியல் குறித்து பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Sunday,December 03 2017]

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்துள்ள விஷாலுக்கு ஒருசிலரை தவிர பெரும்பாலான திரையுலகினர் ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும் 50 ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியை கண்டு வெறுத்து போன பொதுமக்களும் ஒரு இளரத்தம் அரசியலுக்கு தேவை என்ற கருத்தையே சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஷாலுக்கு இயக்குனர் சுசீந்திரன் தனது முழு ஆதரவை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: தமிழ்' என்ற ஒரு சொல்லை பயன்படுத்தி அரசியல் வியாபாரம் செய்யாமல், நல்லவன் எவன் வந்தாலும் நமக்கு நல்லது. விஷால் உண்மைக்கும் நல்லவன். அரசியல் மாற்றம் வேணும்னு நினைக்கிறவன் விஷாலுக்கு ஓட்டு போடுங்க..மக்களுக்காக உண்மையா உழைப்பாரு, இது என் கருத்து' என்று கூறியுள்ளார்.

பல வருடங்களாக அதிகாரங்களை கையில் வைத்திருந்த சரத்குமார்,ராதாரவி, தாணு போன்றவர்களை எதிர்த்து வெற்றி பெற்ற அனுபவம் உள்ள விஷால், அந்த அனுபவத்தை அடிப்படையாக கொண்டு, ராஜதந்திரத்துடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் செயல்பட்டால், அவர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.