பாம்பு பிரச்சனை: சுசிந்திரன் விளக்கத்தை வனத்துறை ஏற்று கொண்டதா?
- IndiaGlitz, [Sunday,November 22 2020]
சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கி வரும் ’ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தில் பாம்பு குறித்த ஒரு காட்சிக்கு வனத்துறை விளக்கம் கேட்டு படக்குழுவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது என்பது தெரிந்தது.
இந்தநிலையில் இந்த நோட்டீசுக்கு சுசீந்திரன் தற்போது விளக்கம் அளித்து உள்ளதாகவும் அந்த விளக்கத்தை வனத்துறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
’ஈஸ்வரன்’ படத்தில் சிம்பு பாம்பை பிடிப்பது போன்ற காட்சி பற்றி இயக்குனர் சுசீந்திரன் வனத்துறை அதிகாரிகளிடம் நேரில் சென்று விளக்கம் அளித்தார் என்றும், ரப்பர் பாம்பு மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் நேரில் சென்று தாங்கள் படமாக்கிய காட்சி கிராபிக்ஸ் பாம்புதான் என்றும் உண்மையான பாம்பு அல்ல என்றும் அவர் விளக்கியதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் ஈஸ்வரன் படப்பிடிப்பில் நடிகர் சிம்பு வைத்திருந்தது ரப்பர் பாம்பு தான் என்பதை உறுதி செய்த அதிகாரிகள் தத்ரூபமாக காட்சியை வடிவமைத்த படக்குழுவினருக்கு வனத்துறை அதிகாரி பாராட்டு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.