ஜல்லிக்கட்டு குறித்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.. சூர்யாவின் நெகிழ்ச்சியான பதிவு..!

  • IndiaGlitz, [Friday,May 19 2023]

ஜல்லிக்கட்டு வழக்கு குறித்த தீர்ப்பை நேற்று உச்ச நீதிமன்றம் வழங்கிய நிலையில் இந்த தீர்ப்பு குறித்து நடிகர் சூர்யா தனது நெகிழ்ச்சியான பதிவை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் தாக்கல் செய்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. அதில் ஜல்லிக்கட்டு போட்டி என்பது கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்றும் அதில் உச்சநீதிமன்ற தலையிட முடியாது என்றும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி ஜல்லிக்கட்டுக்கு எதிராக தாக்கல் செய்த அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் வரவேற்றனர். அதேபோல் கமலஹாசன், ஜிவி பிரகாஷ் உட்பட பல திரையுலக பிரபலங்களும் இந்த தீர்ப்புக்கு தங்களது கருத்தை தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர் சூர்யா சற்று முன் தனது சமூக வலைதளத்தில் இந்த தீர்ப்பு குறித்து கூறியிருப்பதாவது:

ஜல்லிக்கட்டு நம் கலாச்சார வடிவத்துடன் ஒருங்கிணைந்தது என்பதை உணர்த்தும்படி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. அதேபோல் கன்னடாவின் கம்பளாவிற்கும் அனுமதி அளித்திருப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது. இரு மாநில அரசுக்கும், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று பதிவு செய்துள்ளார்.

நடிகர் சூர்யா, ஜல்லிக்கட்டு குறித்த கதையம்சம் கொண்ட ‘வாடிவாசல்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் என்பதும், இந்த படத்தை வெற்றி மாறன் இயக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.