இந்திய நீதித்துறை குறித்து மீண்டும் டுவிட் போட்ட சூர்யா!
- IndiaGlitz, [Saturday,September 19 2020]
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் தேர்வு குறித்து காரசாரமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்தும் நீதித்துறை குறித்தும் அவர் கூறிய கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த அறிக்கைக்கு பெரும்பாலானோர் ஆதரவும் ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வந்ததால் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த அறிக்கையில் அவர் நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தைத் தெரிவித்தாகவும், அதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு சிலரும், நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று சில நீதிபதிகளும் கருத்து தெரிவித்தனர்
இதனையடுத்து நேற்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் பரிந்துரையின் அடிப்படையில் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை என தலைமை நீதிபதி அமர்வு முடிவு செய்தது. இருப்பினும் நீதித்துறை குறித்து சூர்யா பேசும்போது கவனமாக பேச வேண்டும் என்று அறிவுறுத்தியது
இந்த நிலையில் சற்று முன் நடிகர் சூர்யா நீதித்துறை குறித்து தனது டுவிட்டரில் மீண்டும் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்திய நீதித்துறையின் பெருந்தன்மை எனக்கு நிறைவை தருகிறது. எனக்கு இந்திய நீதித்துறை மீது பெரிய மதிப்பு உள்ளது. இந்தியாவில் மக்களுக்கு இருக்கும் அரசியலமைப்பு சட்ட உரிமைகளை காக்கும் ஒரே நம்பிக்கை நீதித்துறைதான். சென்னை ஐகோர்ட் கொடுத்த நியாயமான தீர்ப்பை தாழ்மையுடன், பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது
— Suriya Sivakumar (@Suriya_offl) September 18, 2020