சூர்யாவின் '24'. திரைமுன்னோட்டம்

  • IndiaGlitz, [Thursday,May 05 2016]

சூர்யா, சமந்தா, விக்ரம்குமார், ஏ.ஆர்.ரஹ்மான் நித்யாமேனன், போன்ற ஜாம்பவான்கள் ஒரே படத்தில் இணைந்துள்ள '24' திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் சுமார் 2000 திரையரங்குகளுக்கும் அதிகமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இதுவரை இல்லாத அளவில் சூர்யா படம் ஒன்று பெரும் எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையில்லை.


ஆத்ரேயா உள்பட மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யா, பாடலுக்கு வந்து மட்டும் தலைகாட்டாமல் கதையோடு பயணம் செய்யும் சமந்தா மற்றும் நித்யாமேனன் கேரக்டர்கள், ஏ.ஆர்.ரஹ்மானின் மிரட்டும் இசை, விக்ரம் குமாரின் இயக்கம் ஆகியவையே இந்த படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளன.

தமிழில் இதற்கு முன்னர் 'இன்று நேற்று நாளை' என்ற டைம் மிஷின் படம் வெளிவந்திருந்தாலும், ஒரு பெரிய நடிகரின் நடிப்பில், பிரமாண்டமான டைம் மிஷின் படமாக உருவாகியுள்ள இந்த படம், இனிவரும் டைம் மிஷின் படங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோலிவுட்டில் பேய்ப்பட சீசன் முடிந்துள்ள நிலையில் இந்த படத்தின் வெற்றி அடுத்தடுத்து பல டைம்மிஷின் படங்கள் உருவாக வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

டிரைலரிலேயே பின்னி பெடலெடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கண்டிப்பாக இந்த படத்தின் பெரிய ப்ளஸ் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சூர்யா தயாரித்த முதல் பெரிய பட்ஜெட் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.


சூர்யா எப்போதுமே தான் நடிக்கும் கேரக்டராகவே மாறிவிடுவார் என்பது அனைவரும் அறிந்ததுதான் ஆனால் இந்த படத்தில் முதன்முதலாக ஹீரோ மற்றும் வில்லன் கேரக்டர்களை சூர்யாவே ஏற்றுள்ளார். அதுவும் அவர் நடித்துள்ள ஆத்ரேயா கேரக்டர் பெரிய அளவில் பாப்புலராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா-சமந்தாவின் கெமிஸ்ட்ரி ஏற்கனவே 'அஞ்சான்' படத்தில் வொர்க் அவுட் ஆன நிலையில் மீண்டும் அதே ஜோடி இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளது. மேலும் 'ஓகே கண்மணி' படத்திற்கு பின்னர் நித்யாமேனனுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தை போலவே சூர்யாவின் படங்களுக்கு தெலுங்கு திரையுலகிலும் நல்ல வரவேற்பு இருந்து வருவதால் இந்த படம் தெலுங்கு மாநிலங்களிலும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 1500 திரையரங்குகளிலும் வெளிநாடுகளில் சுமார் 650 திரையரங்குகளிலும் இந்த படம் ரிலீஸ் ஆவதாக செய்திகள் வந்துள்ளது. இந்நிலையில் இந்த படம் ரசிகர்களை எந்த அளவுக்கு கவர்ந்தது என்பதை நாளைய திரைவிமர்சனத்தில் பார்ப்போம்.