உனக்கு என்ன தகுதி இருக்கு? என்று கேட்டவர்களுக்கு சூர்யாவின் பதிலடி அறிக்கை

  • IndiaGlitz, [Saturday,July 20 2019]

கல்வி என்பது ஒரு சமூக அறம். பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது. நம் நாட்டில் கல்வியானது ஏழைகளுக்கு ஒன்றாகவும், வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர புள்ளி விவரங்கள் தேவையில்லை. மனசாட்சியே போதுமானது. அப்படிப்பட்ட மனசாட்சிதான் அனைவருக்கும் சமமான தேர்வு வைப்பதைவிட ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளுக்கும் சமமான தரமான இலவசக் கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று வலியுறுத்துகிறது

இதுவரை அகரம் பவுண்டேஷன் மூலமாக சுமார் 3000 மாணவர்கள் உயர்கல்வி படிக்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர். அவர்களில் 1169 பேர் பொறியாளர்கள் 1234 பேர் கலை அறிவியல் பட்டதாரிகள். 54 பேர் மருத்துவர்கள், 25 பேர் பாராமெடிக்கல் படிப்புகளுக்கும் 167 டிப்ளமோ படிப்புகளுக்கும் வாய்ப்பு பெற்று இருக்கின்றார்கள். இப்படி படித்தவர்களில் 90% பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள். ஐடிஐ டிப்ளமோ முதல் ஐஐடி ஆராய்ச்சி வரை பல்வேறு நிலைகளில் சிறந்து விளங்குகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான அகரம் தன்னார்வலர்கள் கிராமங்களுக்கு நேரடியாக சென்று மாணவர்களை குடும்பச் சூழலையும் கல்விச் சூழலையும் ஆய்வுசெய்து பகிரும் அனுபவங்களைக் கேட்டு கண்கள் கலங்கிப் போகும்

பெற்றோரை இழந்த நிலையில் கல்வி ஒன்றையே தன் வாழ்க்கையாகக் கருதி நல்ல மதிப்பெண் எடுத்த ஒரு மாணவி விண்ணப்பம் வாங்க கூட முடியாமல் தவித்தார். இன்று அவர் மருத்துவம் முடித்து இந்திய ராணுவத்தில் மருத்துவர் ஆக பணியாற்றுகிறார். கல் உடைக்கும் தொழிலாளியின் மகன் சென்னை மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்து மருத்துவ மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார். ஆடு மேய்க்கிற பெற்றோரின் மகன் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டராகி விருப்பத்துடன் கிராமப்புறங்களில் பணியாற்றுகிறார். நீட் தேர்வு இருந்திருந்தால் இவர்கள் யாரும் மருத்துவர்கள் ஆகியிருக்க முடியாது. அரசுப் பள்ளிகளில் படித்து மருத்துவர்களான மாணவர்கள் தகுதியிலும் தரத்திலும் சிறந்து விளங்குகின்றனர் நீட் அறிமுகமான பிறகு அதன் மூலமாக அரசு பள்ளியில் படித்த ஒரே ஒரு மாணவரை கூட மருத்துவக் கல்லூரியில் சேர்க்க முடியவில்லை. புதிய கல்விக் கொள்கையில் எல்லாவிதமான பட்டப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுக்கான பரிந்துரை இருப்பது அச்சமூட்டுகிறது. உயர் கல்வியில் இருந்து கிராமப்புற மாணவர்களை நுழைவுத்தேர்வுகள் துடைத்து எறிந்து விடும்

பெருநகரங்களின் கண்கள் கூசும் வெளிச்சத்திலும் நிழல் கூட படியாத மின்சாரமற்ற வீடுகளில் வாழ்ந்து தெருவிளக்கின் வெளிச்சத்தில் படிக்கின்ற மாணவர்களின் தடைகளையும் வழிகளையும் கள அனுபவம் மூலமாக அறிந்து இருக்கின்றோம். அவர்களின் வறுமைச் சூழல் எங்களை கூனி குறுக செய்திருக்கின்றது. இத்தகைய மாணவர்களின் எதிர்கால நலனை தீர்மானிக்கின்ற தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை மீது நாம் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பதை எண்ணி கவலையாக இருந்தது. மாணவர்களை மனதில் நிறுத்தி இந்த கல்விக் கொள்கையை அணுக வேண்டிய தேவை அனைவருக்கும் இருக்கிறது. ஏழை கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற கல்விக் கொள்கையில் சமூகத்தின் அனைத்து தரப்பினரின் பங்கேற்க உறுதி செய்யவே கல்வியாளர்களுடன் பத்திரிகையாளர்களை சந்தித்து வேண்டுகோள் வைத்தோம். அதற்கு கிடைத்த வரவேற்பு எங்களை நெகிழச் செய்தது.

கல்வியைப் பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு என்று எதிர்க்கருத்துக்கள் வந்த போது ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் கல்வி நலன் மீது அக்கறை கொண்டு என் கருத்துக்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவு கல்விப் பணிகள் தொடர்ந்து இயங்கும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள், கல்விக்கொள்கை பற்றிய விவாதத்தை முன்னெடுத்த பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

சமமான வாய்ப்பும் தரமான கல்வியும் மறுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களின் நிலை உணர்ந்த ஒரு குடிமகனாக, சகமனிதனாகவே என்னுடைய கேள்விகளை முன் வைக்கின்றேன். தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை குறித்து நாட்டின் வளர்ச்சியிலும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட கல்வி அலுவலரிடம் உரையாடி தெளிவை பெற்றுள்ளோம். இந்த வரைவு அறிக்கை மீதான ஆக்கபூர்வமான கருத்துக்களை கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் இணையத்தில் இம்மாத இறுதிக்குள் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசும் அனைத்து தரப்பின் கருத்துக்களையும் கேட்டறிந்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுகோள் வைக்கிறேன் ஏழை மாணவர்களுக்கு கல்வியை உயர பறப்பதற்கான சிறகு. அது முறிந்து போகாமல் இருக்க அனைவரும் துணை நிற்போம்.