'ஜெய்பீம்' படத்தின் நோக்கம் இதுதான்: திருமாவளவனுக்கு சூர்யா பதில்!

  • IndiaGlitz, [Monday,November 15 2021]

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படத்தை பல அரசியல் பிரபலங்கள் பாராட்டி வரும் நிலையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ’ஜெய்பீம்’ படம் குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார். கலை நாயகன் சூர்யா அவர்களின் சமூக பொறுப்புடன் கூடிய தொண்டு உள்ளத்தையும் தொழில் அறத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உளமார பாராட்டுகிறோம் என்று தெரிவித்திருந்தார். மேலும் அவர் இது குறித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமாவளவனுக்கு பதிலளிக்கும் வகையில் சற்று முன் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மக்கள் தொகையில் மிக சிறுபான்மையினராக இருக்கும் பழங்குடியின நலன் சார்ந்து தாங்களும் தங்கள் இயக்கமும் தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கின்றது. தாங்கள் குறிப்பிட்டதை போல மாண்புமிகு தமிழக முதல்வர் பழங்குடியின மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வுகாண உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது அனைவருக்கும் மிகுந்த மனநிறைவை தந்துள்ளது.

பாதிக்கப்படும் மக்களின் பிரச்சினைகளை அனைவரிடமும் கொண்டு போய் சேர்ப்பது மட்டுமே ’ஜெய்பீம்’ திரைப்படத்தின் நோக்கம். கவனப்படுத்துவது மட்டுமே படைப்பின் மூலம் சாத்தியம். உண்மையான சமூக மாற்றங்களை அரசும் அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும். ஊக்கமூட்டும் தங்களது வார்த்தைகளுக்கு நன்றி என சூர்யா குறிப்பிட்டுள்ளார்.