சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' முன்னோட்டம்:
- IndiaGlitz, [Wednesday,January 10 2018]
பொதுவாக சூர்யாவின் திரைப்படங்கள் என்றால் தமிழகத்தில் மட்டுமின்றி தெலுங்கு மாநிலங்களிலும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் இந்த முறை கேரளாவில் உள்ள சூர்யா ரசிகர்களும் ஆவலுடன் அவர் நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை எதிர்நோக்கியுள்ளதால் இந்த படம் ஒரு தென்னிந்திய படம் என்றே சொல்ல வேண்டும். இந்த படத்தின் முன்னோட்டம் குறித்து தற்போது பார்ப்போம்
சூர்யாவுடன் கடந்த 2015ஆம் ஆண்டு 'நானும் ரெளடிதான்' என்ற சூப்பர் ஹிட் வெற்றி படத்தை கொடுத்த விக்னேஷ் சிவன் முதன்முதலில் இணணந்துள்ளதே இந்த படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு காரணம். அதுமட்டுமின்றி இளம் இசைப்புயல் அனிருத், முன்னணி நாயகிகளில் ஒருவரான கீர்த்திசுரேஷ், சீனியர் நட்சத்திரங்களான ரம்யாகிருஷ்ணன், கார்த்திக், சுரேஷ்மேனன், செந்தில் ஆகியோர்களும் இந்த படத்தின் இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு எகிறியது என்றே கூறலாம்
கடந்த 1987ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படம் இந்தியில் சூப்பர் ஹிட்டான 'ஸ்பெஷல் 26' என்ற படத்தின் ரீமேக் என்றாலும் முற்றிலும் வேறு ஒரு பாதையில் கதை செல்வதாகவும், அந்த படத்தின் கருவை மட்டும் எடுத்து கொண்டு தென்னிந்தியாவுக்கு ஏற்ற வகையில் திரைக்கதையில் புதுமை செய்திருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் மற்ற படங்களில் தொடக்கத்தில் வரும் புகை பிடிக்காதீர், மது அருந்தாதீர் என்ற Disclaimer card இந்த படத்திற்கு வராது என்றும் ஏனெனில் இந்த படத்தில் மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற காட்சியே இல்லை என்றும் படக்குழுவினர் பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.
அனிருத்தின் இசையில் உருவான ஐந்து பாடல்களும் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டது. குறிப்பாக சொடக்கு மேல சொடக்கு போட்டு பாடல் பட்டிதொட்டியெங்கும் டிரெண்ட் ஆகியுள்ளது. மேலும் நானா தானா', மற்றும் பீலா பீலா பாடல்களும் எப்.எம் வானொலிகளில் அடிக்கடி ஒலித்து கொண்டிருக்கின்றது.
ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படம் நாளை மறுநாள் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் தற்போது விறுவிறுப்பாக முன்பதிவும் நடைபெற்று வருகிறது. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை நாளை மறுநாள் இந்த படத்தின் விமர்சனத்தில் பார்ப்போம்