சூர்யா ரசிகர்களே உண்மையான 'காப்பான்': நெல்லை துணை ஆணையர் வாழ்த்து!

  • IndiaGlitz, [Sunday,September 15 2019]

சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் கலாச்சாரம் காரணமாக பரிதாபமாக பலியான சம்பவத்தை அடுத்து அரசியல்வாதிகளும், திரையுலகினர்களும் பேனர் கலாச்சாரத்திற்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கிவிட்டனர்.

அந்த வகையில் நடிகர் சூர்யா நேற்று நடைபெற்ற ‘காப்பான்’ திரைப்பட புரமோஷன் விழாவில், பேனர் வைப்பதற்கு ஆகும் செலவை கல்வி உதவிக்காக பள்ளிகளுக்கு வழங்குங்கள்’ என்று தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் அவர்கள் நடிகர்களின் ரசிகர்கள் பேனர் வைப்பதற்கு செலவு செய்யும் தொகையில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வாங்கி கொடுக்கலாம் என்றும் அதனால் வாகன ஓட்டிகளுக்கு உயிர் பாதுகாப்பு கிடைக்கும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நெல்லை சூர்யா ரசிகர்கள் சூர்யாவின் புதிய திரைப்படமான ‘காப்பான்’ வெளியாகும்போது பேனர், கட்அவுட்டுக்கு பதில் 200 ஹெல்மெட் வழங்கப்படும் என அறிவித்தனர். தனது கோரிக்கையை ஏற்று பேனருக்கு பதில் ஹெல்மெட் வழங்கினால் அவர்களே உண்மையான காப்பான் என்று நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.