என் ஜோதிகாவிற்கு தேசிய விருதை அன்புடன் உரித்தாக்குகிறேன்: சூர்யாவின் நெகிழ்ச்சி அறிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று 68வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவுக்கு கிடைத்தது என்பது மட்டுமின்றி அவர் நடித்த 'சூரரைப்போற்று’ திரைப்படத்திற்கு மொத்தம் ஐந்து விருதுகள் கிடைத்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யா இந்த விருதை தனது மனைவி ஜோதிகா மற்றும் தனது குழந்தைகளுக்கு உரித்தாக்குகிறேன் என்று நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
“வணக்கம்.. அன்பான வாழ்த்துகளால் வாழ்வை நிறைக்கும் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றிகள்.. ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு ’ஐந்து தேசிய விருதுகள்’ கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. பெருந்தொற்று காலத்தில் எதிர்பாராத நெருக்கடிகளுக்கு இடையில் வெளியான இத்திரைப்படத்திற்கு இந்திய அளவில் வரவேற்பு கிடைத்தது.
தன்னம்பிக்கை நிறைந்த கேப்டன் கோபிநாத்தின் வாழ்வைச் சிறந்த திரைப்படமாக்க பல ஆண்டுகள் உழைத்த, இயக்குநர் சுதா கொங்கராவின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. தேசிய விருது பெறுகிற சுதா கொங்கரா - ஷாலினி உஷா நாயர், ஜி.வி. பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.
சிறந்த திரைப்படத்தை தயாரிக்க துணைநின்ற படக்குழுவினர் அனைவருக்கும் இந்த அங்கீகாரம் உரியது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் சகோதரர் அஜய் தேவ்கனுக்கும், மேலும் தேசிய விருது பெறுகிற இயக்குநர் வசந்த் சாய், ஸ்ரீகர் பிரசாத், லஷ்மி ப்ரியா சந்திரமௌலி, இயக்குநர் மடோன் அஸ்வின் மற்றும் 68-வது தேசியவிருது பெறுகிற சக கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
’நேருக்கு நேர்’ திரைப்படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்த இயக்குநர் வசந்த் சாய்க்கும், தயாரிப்பாளர் இயக்குநர் மணிரத்னதுக்கும் இந்த தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பும், வழிகாட்டலும் தந்து எப்போதும் துணைநிற்கும் அம்மா, அப்பா, கார்த்தி, பிருந்தா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் நடிக்கவும், தயாரிக்கவும் வலியுறுத்திய என் ஜோதிகாவிற்கும், அன்பு பிள்ளைகள் தியா, தேவ் ஆகியோருக்கும் இந்த விருதை அன்புடன் உரித்தாக்குகிறேன்.
என் முயற்சிகளை வரவேற்று கொண்டாடும் மக்களுக்கும், என்னுடைய ஏற்றத் தாழ்வுகளில் எப்போதும் உடனிருக்கும் அன்பு தம்பி-தங்கைகளுக்கும் நெஞ்சம் நிறைந்த அன்பும்.. நன்றியும்.. இந்த தேசிய விருது அங்கீகாரம், நல்ல திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஊக்கத்தை அளிக்கிறது. தேர்வுக் குழுவினருக்கும், இந்திய அரசிற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
அன்பின் வாழ்த்துகளால் நெகிழச் செய்கிற அனைவருக்கும் மீண்டும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.” என கூறியுள்ளார்.
மனமார்ந்த நன்றி!
— Suriya Sivakumar (@Suriya_offl) July 22, 2022
Overwhelmed!! #SooraraiPottru pic.twitter.com/fxGycj7h4Y
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com