20 வருடங்களுக்கும் மேலாக மக்களை குடிக்க வைக்கிறது அரசு.. சூர்யா கடும் கண்டனம்..!

  • IndiaGlitz, [Friday,June 21 2024]

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 50 பேர் பலியாகி உள்ள நிலையில் பல திரையுலக பிரபலங்கள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 20 வருடங்களாக மாநில அரசுகள் டாஸ்மாக் மதுவை விற்பனை செய்து மக்களை குடிக்க வைத்து வருகின்றன என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில்கூட நடக்காத துயரம். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள் எனும் தகவல் அச்சமூட்டுகிறது. அடுத்தடுத்து நிகழும் மரணங்களும், பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலும் மனதை நடுங்கச் செய்கிறது.

கள்ளச்சாராயத்திற்கு அன்பிற்குரியவர்களே பலி கொடுத்துவிட்டு அழுது துடிப்பவர்களுக்கு எத்தகைய வார்த்தைகளில் ஆறுதல் சொல்லிவிடமுடியும்? தற்போது அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஊடகங்கள், மக்கள் என அனைத்து தரப்பினரின் கவனமும், கவலையும், கோபமும் அதிகரித்திருக்கிறது. அரசும், ஆட்சி நிர்வாகமும் விரைந்து செயல்பட்டு, இழப்பைக் குறைக்க போராடிக் கொண்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால் நீண்ட கால பிரச்சினைக்கு குறுகிய கால தீர்வு என்கிற இந்த வழக்கமான அணுகுமுறை நிச்சயம் பலனளிக்காது.

கடந்த ஆண்டு இதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியானர்கள். அரசு தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது. இப்போது பக்கத்து மாவட்டத்தில் அதே மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து கொத்து கொத்தாக மக்கள் இறந்திருக்கிறார்கள். இப்போதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

வாழ்வை மேம்படுத்துவார்கள் என நம்பி வாக்களிக்கும் தமிழக மக்களை, கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக மாறி மாறி நம்மை ஆட்சி புரிந்த அரசாங்கங்களே டாஸ்மாக் வைத்து மக்களை குடிக்க வைக்கிற அவலத்தை தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். 'மதுவிலக்கு கொள்கை' என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் நேரத்து பேசுபொருளாக மட்டுமே முடிந்துவிடுகிறது.

டாஸ்மாக்கில் 150 ரூபாய்க்கு குடித்து போதைக்கு அடிமையானவர்கள் பணம் இல்லாத போது 50 ரூபாய்க்கு கிடைக்கும் கள்ளச் சாராயத்தை வாங்கிக் குடிக்கிறார்கள். குடிக்கு அடிமையானவர்களின் பிரச்சினை என்பது தனிநபர் பிரச்சினை அல்ல, அந்த ஒவ்வொரு குடும்பத்தின், ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சினை என்பதை எப்போது நாம் அனைவரும் உணரப்போகிறோம்?.

அரசாங்கங்களே குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தி சொந்த மக்கள் மீது 2 ஆண்டுகளாக நடத்திவரும் வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும். குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்க மாவட்டம் தோறும் மறுவாழ்வு மையங்களை தொடங்கி அவர்களை குடி நோயிலிருந்து மீட்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் முன்னேற அரசு எத்தகைய தொலைநோக்கு செயல் திட்டங்களை நடைமுறை படுத்துகிறதோ, அதேபோல குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மறுவாழ்விற்கு முன்னுதாரணமான திட்டங்களை வகுத்து ஓர் இயக்கமாகவே செயல்படுத்த வேண்டும்.

அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால் மட்டுமே இனி எதிர்காலத்தில் இதுபோன்ற அவல மரணங்களைத் தடுக்க முடியும். குறுகிய கால தீர்வை கடந்து தமிழக முதல்வர் மதுவிலக்கு கொள்கையில் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுப்பார் என மக்களோடு சேர்ந்து நானும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.

சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயத்தை தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்துக்கு கடும் கண்டனம். இறந்த உயிர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். மருத்துவமனையில் இருப்பவர்கள் மீண்டு வர பிரார்த்தனை. இனி ஒரு விதி செய்வோம். அதை எந்நாளும் காப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

More News

வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய அவசியம் & நன்மைகள் :ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்!

ஆன்மீகக்ளிட்ஸில் விளக்கு ஏற்றும் மகிமை குறித்த விஜயகுமாரின் பேட்டி

இப்படியெல்லாம் கூட யோகா செய்ய முடியுமா? 'கோமாளி' நடிகையின் ஆச்சரியமான புகைப்படங்கள்..!

ஜெயம் ரவியின் 'கோமாளி' திரைப்படத்தில் நடித்த நடிகை இன்று உலக யோகா தினத்தை முன்னிட்டு சில யோகா செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டுள்ள நிலையில்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ப்ளாக்பஸ்டர்  'அரண்மனை 4' .. திரையரங்கில் தவறவிட்டவர்கள் குஷி..!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் பிளாக்பஸ்டரான இயக்குநர் சுந்தர் சியின் "அரண்மனை 4" திரைப்படத்தை  தற்போது ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது.

பிரபல நடிகரின் அலுவலகத்தில் திருட்டு.. திருடு போன திரைப்படங்களின் நெகட்டிவ்கள்..!

பிரபல நடிகரின் அலுவலகத்தில் மர்ம நபர்கள்  நுழைந்து திரைப்பட நெகட்டிவ் உள்பட விலை உயர்ந்த பொருட்களை திருடி சென்றுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் பிறந்த நாளில் சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட வெங்கட்பிரபு.. 'கோட்' அப்டேட்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' படத்தின் சிங்கிள் பாடல் குறித்த அப்டேட்டை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர்.