சூர்யா-பவன்கல்யாண் ரசிகர்களுக்கு ஏற்பட்ட திடீர் அதிருப்தி

  • IndiaGlitz, [Monday,January 08 2018]

பொதுவாக ஒரு திரைப்படம் வியாபாரம் பேசும்போது தயாரிப்பாளரும் விநியோகிஸ்தரும் பேசி ஒரு தொகையை முடிவு செய்வார்கள். அந்த தொகையில் கருத்துவேறுபாடு இருந்தால் தயாரிப்பாளரே நேரடியாக திரையரங்குகளில் வெளியிடுவார்கள். உலகம் முழுவதும் இதுதான் வழக்கமாக இருந்து வரும் நிலையில் தென்னாப்பிரிக்கா மட்டும் சற்று வித்தியாசமாக உள்ளது.

இந்த நாட்டில் திரைப்படங்களை வாங்கி விநியோகிக்கும் விநியோகஸ்தர்கள் வைத்ததுதான் விலை. அதை மீறி தயாரிப்பாளர் அந்நாட்டில் சொந்தமாக திரையரங்குகளில் வெளியிட முடியாது. அதிலும் விநியோகிஸ்தர்கள் நிர்ணயம் செய்யும் விலை மிகக்குறைவாக இருக்கும். அதாவது சந்தை மதிப்பு பத்து ரூபாய் என்றால் அந்நாட்டு விநியோகிஸ்தர்கள் இரண்டு ரூபாய் தான் நிர்ணயிப்பார்கள்.

இந்த அராஜகம் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து வரும் நிலையில் தற்போது பொங்கல் தினத்தில் வெளியாகும் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' மற்றும் பவன்கல்யாணின் 'அஞ்ஞாதவாசம்' ஆகிய இரு படங்களுக்கும் தென்னாப்பிரிக்காவில் இதே நிலை தான் ஏற்பட்டுள்ளது. இதனால் தென்னாப்பிரிக்காவில் உள்ள சூர்யா மற்றும் பவன்கல்யாண் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.