இன்னொரு படத்திற்கும் வாய்ப்பு.. 'சூர்யா 45' இசையமைப்பாளருக்கு குவியும் படங்கள்..!
- IndiaGlitz, [Wednesday,December 11 2024]
சமீபத்தில் சூர்யா நடிக்க இருக்கும் 45வது திரைப்படத்தின் இசையமைப்பாளராக அபிநயங்கர் என்பவர் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு இன்னொரு பட வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் இளம் இசையமைப்பாளராக ’சூர்யா 45’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகும் சாய் அபிநயங்கர், பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருக்கும் அடுத்த படத்திற்கும் இசையமைக்க இருப்பதாக கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சுதா கொங்காரா உதவி இயக்குனர் கார்த்தீஸ்வரன் என்பவரது இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாகவும் மமிதா பாஜூ நாயகியாகவும் நடிக்க இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ள இந்த படத்தின் பூஜை இன்னும் சில நாட்களில் நடைபெறும் என்றும் ஜனவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது இந்த படத்திற்கு சாய் அபிநயங்கர் இசையமைக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்ட ’சூர்யா 45’ திரைப்படத்தில் அவர் விலகியதை அடுத்து சாய் அபிநயங்கர் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டார். தற்போது மேலும் ஒரு பெரிய படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
இந்த இரண்டு படங்களிலும் அவர் தனது முழு திறமையை நிரூபித்தால், தமிழ் திரையுலகின் இன்னொரு பிஸியான இசையமைப்பாளர் உருவாகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.