இப்ப நீ சொல்லு.. கல்யாணம் பண்ணிக்கிடலாமடி? 'சூர்யா 44' படத்தின் டைட்டில் டீசர்..!
- IndiaGlitz, [Wednesday,December 25 2024]
சூர்யாவின் 44வது திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வந்த நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று கிறிஸ்துமஸ் தினத்தில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சற்றுமுன் அந்த டீசர் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இரண்டு நிமிடங்கள் ஓடும் இந்த டீசரில், சூர்யா தன்னுடைய பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு, சண்டையை விட்டுவிட்டு, காதலுக்காக, உனக்காக எல்லாம் விட்டு விடுகிறேன் என்றும், இப்ப சொல்லு நான் கல்யாணம் பண்ணிக்கலாமா? என்று பூஜா ஹெக்டேவிடம் கேட்கிறார். அதற்கு அவர் சரி என்று கூறுகிறார். இந்த இரண்டு நிமிட காட்சி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த படத்தில், நாசர் , பிரகாஷ் ராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை, சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த படத்திற்கு ஜானி’ ’கல்ட்’ உள்பட சில டைட்டில்கள் வைக்கப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது இந்த படத்திற்கு ரெட்ரோ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.