1,000 காதலிகளைக் கொண்ட விசித்திர மனிதனுக்கு 1,045 வருடச்சிறை… நடந்தது என்ன?

  • IndiaGlitz, [Friday,February 18 2022]

துருக்கிய நாட்டைச் சேர்ந்த மதப் போதகர் ஒருவருக்கு இஸ்தான்புல் நீதிமன்றம் கடந்த ஆண்டு 1,045 வருடங்கள் சிறை தண்டனை வழங்கியிருந்தது. இவர் மீது மேலும் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தற்போது மேல்முறையீட்டுக்கு தயாராகி வருவதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

துருக்கியில் வாழ்ந்துவரும் அட்னான் ஓக்தார் என்பவர் அந்நாட்டின் குறிப்பிட்ட ஒரு இஸ்லாம் மத அமைப்புக்கு தலைவராக இருந்து வருகிறார். மேலும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்ட பல பெண்களுடன் வாழ்ந்துவரும் இவர் எப்போதும் அந்தப் பெண்களுடனே சாலையில் நடமாடுவதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுமாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அட்னான் ஓக்தார் மீது கடந்த 2018 இல் பாலியல் வன்கொடுமை, சிறார்களை கிரிமினல்களாக மாற்றியது, மோசடி வழக்கு, அரசியல் மற்றும் உள்நாட்டு விவகாரங்களை திருடியது எனப்பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து ஓக்தாருக்கு சொந்தமான பல இடங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஓக்தாரின் வீட்டிலிருந்து 69,000 கருத்தடை மாத்திரைகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த மாத்திரைகள் குறித்து நீதிமன்றத்தில் பேசிய ஓக்தார் மாதவிடாய் கோளாறு மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும்போது பெண்களுக்கு கொடுப்பதற்கு வைத்திருந்ததாக விளக்கம் அளித்திருந்தார். தொடர்ந்து தனக்கு 1,000 காதலிகள் இருப்பதாகவும் என் இதயம் பெண்கள் மீதான காதல் வெள்ளத்தில் மூழ்கியது என்றும் நீதிமன்றத்தில் கூறினார்.

இதைத்தவிர காதல் என்பது மனித குணம், இதுதான் இஸ்லாமின் குணம். நான் அசாதாரணமான சக்தி வாய்ந்தவன் என்று தன்னை மிகைப்படுத்திக் கொண்டு வாழ்ந்துவந்த ஓக்தாருக்கு கடந்த 2021 இல் 1,045 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஏற்கனவே 10 வெவ்வேறு குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு இருக்கும் நிலையில் மேலும் சில பெண்கள் இவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் விசித்திரத்திற்குப் பெயர்போன அட்னான் ஓக்தார் மீது இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார் என்றும் மூக்கு சர்ஜரி செய்தபோது மயக்கமருந்து கொடுக்காமலே தன்னை துன்புறுத்தினார் என்றும் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து அட்னான் ஓக்தார் மேல்முறையீட்டு தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.