சுனாமியை ஜெயித்த மாற்றுத்திறனாளி… 27 மணிநேரம் கடலில் நீந்தி தப்பித்த சம்பவம்!
- IndiaGlitz, [Saturday,January 22 2022]
சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு அருகேவுள்ள தெற்கு பசிபிக் பெருங்கடலை ஒட்டியிருக்கும் டோங்கா தீவில் சக்திவாய்ந்த எரிமலை ஒன்று வெடித்து சிதறியது. இந்த எரிமலை வெடிப்பு கடந்த ஜனவரி 15 இல் அடங்கியவுடன் அந்தப் பகுதிகளில் கடுமையான சுனாமி அலைத்தாக்கியதில் சிக்கி, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தற்போது உயிர் பிழைத்திருக்கிறார் மாற்றுத்திறனாளி ஒருவர்.
டோங்கா தீவில் எரிமலை வெடித்ததன் காரணமாக அந்தப் பகுதியில் கடுமையான சுனாமி அலை ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியிலுள்ள பல குட்டித் தீவுகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டு தகவல் தொடர்பும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பாதிப்பின்போது அட்டாட்டா தீவில் மரவேலை செய்துவரும் 57 வயதான லிசாலா ஃபோலாவ் என்பவரும் அடித்துச் செல்லப்பட்டு இருக்கிறார்.
முதலில் சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து லிசாலா மற்றும் அவருடைய மகன், மருமகள் மூவரும் மரத்தில் ஏறி பாதுகாப்பாக இருந்த நிலையில் ஒருகட்டத்தில் சுனாமி அலை அடங்கிவிட்டதாக எண்ணி மரத்தை விட்டு கீழே இறங்கியுள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக திடீரென்று சுனாமி அலை தாக்கியதில் இவர்கள் 3 பேரும் அலையில் அடித்துச்செல்லப்பட்டு உள்ளனர்.
இப்படி அடித்துச் செல்லப்பட்ட மாற்றுத்திறனாளியான லிசாலா 7.5 கி.மீ தொலைவு மரத்தைப் பிடித்தவாறே கடலில் நீந்தியிருக்கிறார். 27 மணிநேரம் இப்படியே போராடிய லிசாலா ஒருகட்டத்தில் கரையை அடைந்திருக்கிறார். சுனாமி அலையில் சிக்கி உயிர்பிழைத்திருக்கும் லிசாலாவை தற்போது ரியல் அக்வாமேன் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.