நீதிமன்றத்தில் வெற்றி, மக்கள் மன்றத்தில் தோல்வி. பீட்டா குறித்து சூர்யா
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜல்லிக்கட்டு நடத்த தமிழகம் முழுவதும் உணர்ச்சிபூர்வமான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் நடிகர் சூர்யா, ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
பண்பாடு, அடையாளம், வரலாறு போன்ற வார்த்தைகளை இதுவரை அறிஞர்களும், தலைவர்களும் மட்டுமே உச்சரித்து கொண்டிருந்தார்கள். இப்போது சாதாரண மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் தங்களின் பண்பாடு, அடையாளம், வரலாறு குறித்து பேசுவதற்கு காரணமாக 'ஜல்லிக்கட்டு' மாறி இருக்கிறது. ஜல்லிக்கட்டு நடத்த தடை வாங்கி பொதுபிரச்சனைகளுக்கு இளைஞர்களை ஒன்றுகூடி போராட தூண்டிய அனைவருக்கும் நன்றிகள்.
'தன்னெழுச்சியான' போராட்டங்களில் எப்போதுமே உண்மை இருக்கும். பல நூற்றாண்டுகளாக, தமிழகத்தில் நடந்து வருகிற ஜல்லிக்கட்டு, 'மாடுகளுக்கு எதிரானது' என்று பொய்ப்பிரசாரம் செய்து நீதிமன்றத்தில் வெற்றியும் பெற்ற பீட்டா அமைப்பு, மக்கள் மன்றத்தில் தோற்றிருக்கிறது. நாட்டு மாடு இனம் அழிவதற்கு துணை போகிறவர்கள், ஜல்லிக்கட்டு மூலம் மாடுகள் வதை செய்யப்படுகின்றன என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
சட்டமும், ஆட்சியும் மக்களுக்காக உருவாக்கப்பட்டவை, நமது விரல் எடுத்து நமது கண்களை குத்திக் கிழிக்கிற முயற்சிகளை நாம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது. ஆயிரக்கணக்கான இளைஞர்களின் போராட்டத்தில், ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வும் எதிரொலிக்கிறது. அமைதியான வழியில் நமது உரிமைகள் நிலைநாட்ட போராடுகிற அனைவருக்கும் என் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன். போராடுபாவர்களின் உணர்வோடு நானும் கைகோர்க்கிறேன்.
மக்களின் போராட்டம் வெற்றி பெற்று 'ஜல்லிக்கட்டு' விரைவில் நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஜல்லிக்கட்டு நடைபெற்றதும் நமது போராட்டம் வெற்றி பெற்றதாக அமைதியாகிவிடக்கூடாது. நமது பண்பாட்டையும் அடையாளத்தையும் அழிக்கும் முயற்சிகள் வேறு எந்த வடிவில் இருந்தாலும் இதேபோல ஒன்றுபட்டு குரல் கொடுக்கும்.
இவ்வாறு சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com