சூர்யாவின் அடுத்த சமுதாய பணி நாளை முதல் ஆரம்பம்

  • IndiaGlitz, [Wednesday,April 27 2016]

பிரபல நடிகர் சூர்யா, நடிப்பு மட்டுமின்றி சமூக அக்கறையுடன் பல சமுதாயப் பணிகளையும் செய்து வருகிறார் என்பதை அவ்வப்போது வரும் செய்திகளின் மூலம் தெரிந்து கொண்டு வருகிறோம். அகரம் பவுண்டேஷன் மூலம் சூர்யா பல ஏழைக்குழந்தைகளின் கல்விக்கண்களை திறந்து வைத்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அடுத்தகட்டமாக சுற்றுச்சூழல் சம்பந்தமாக பொதுமக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் 'யாதும்' எனும் மாத இதழை வெளியிட உள்ளார்.


அகரம் பவுண்டேஷன் வெளியிடும் இந்த மாத இதழ் தொடக்க விழா நாளை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நடைபெறவுள்ளது. நீதிபதி சந்துரு முதல் இதழை வெளியிட்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் திரு.ஆண்டனி, திருமதி ஜெயஸ்ரீ, திருத.செ.ஞானவேல் மற்றும் 'புதிய தலைமுறை' திரு.சத்தியநாராயணன் உள்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர். அகரம் பவுண்டேஷன் நிறுவனர் சூர்யா இந்த விழாவில் சிறப்புறை ஆற்றவுள்ளார்.