'அப்பா' சிவகுமார் குறித்து 'மகன்' சூர்யா கூறியது இதுதான்.....
- IndiaGlitz, [Tuesday,April 26 2016]
சமுத்திரக்கனி இயக்கி நடித்து தயாரித்துள்ள திரைப்படம் 'அப்பா'. இந்த படத்தை புரமோஷன் செய்யும் வகையில் நடிகர் சூர்யா இன்று இணையதளத்தில் பேசுவார் என்ற செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் சூர்யா தன்னுடைய அப்பாவின் பெருமைகள் குறித்து கூறியவற்றை தற்போது பார்ப்போம்.
என்னுடைய அப்பா கிராமத்தில் பத்தாவது வரை மட்டுமே படித்து, முதன்முதலாக கிராமத்தை விட்டு வெளியே வந்து, ஓவியராகி பின்னர் நடிகரானவர். எப்பொழுதுமே அவர் கூறும் ஒரு முக்கிய விஷயம் உன்னுடைய பெயரை மற்றவர்கள் ஞாபகம் வைத்துக்கொள்வதை விட உன்னுடைய பழக்கவழக்கங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளும்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.
எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடல்நலம் குறித்த பயிற்சி கொடுத்தவர் அப்பாதான். காலையில் நான்கு மணிக்கு அனைவரையும் எழுப்பி பீச்சுக்கு அழைத்து சென்று சுத்தமான ஓசோன் காற்றை சுவாசிக்க செய்வார். இப்போதுகூட இரவு 9.30 மணிக்கு தூங்கி காலை 4 மணிக்கு எழுந்து வாக்கிங் செல்லும் பழக்கமுடையவர்.
அப்பா சொல்லிக்கொடுத்த இன்னொரு முக்கிய விஷயம் 'உனக்கு கீழே வேலை செய்பவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது. நமக்காக வேலை செய்பவர்களை நாம் கண்டிப்பாக மதிக்கவேண்டும் என்று அவர் சொல்லிக்கொடுத்ததை இன்றுவரை நாங்கள் அனைவரும் பின்பற்றி வருகிறோம்.
மேலும் யாரோடும் நம்மை ஒப்பீடு செய்யக்கூடாது என்று அப்பா சொல்லிக்கொடுத்த மற்றொரு முக்கிய அறிவுரை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும், யாருடைய வாழ்க்கையையும் உன் வாழ்க்கையோடு கம்பேர் செய்தால் வாழ்க்கையில் நிம்மதியாகவே இருக்க முடியாது என்று கூறுவார்.
மேலும் எந்த வேலையாக இருந்தாலும் யாரையும் எதிர்பாராமல் நம்முடைய வேலையை நாமே செய்யவேண்டும் என்பது அப்பா எங்களுக்கு கற்றுக்கொடுத்த மற்றொரு அறிவுரை. இன்று வரை அவர் வெளியே எங்காவது செல்வதாக இருந்தால் அவரே தன் கைப்பட எல்லாவற்றையும் எடுத்து வைப்பார்.
ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒருமுறை புதியதாக ஏதாவது கற்றுக்கொண்டு, வாழ்க்கையை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்பது அப்பா கற்றுக்கொடுத்த இன்னொரு பழக்கம். எல்லா அப்பாக்களும் ஒரு நல்ல அப்பாவாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பு உள்ளது. நானும் நல்ல அப்பாவாக இருக்க முயற்சி செய்கிறேன்'
இவ்வாறு தனது அப்பா குறித்து நடிகர் சூர்யா கூறியுள்ளார்.