சிம்பு என்ற ஒரு சகோதரனோடு தொடங்கினேன், லட்சக்கணக்கான சகோதரர்கள் கிடைத்தனர்: பிரபல தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

  • IndiaGlitz, [Thursday,August 20 2020]

சிம்பு என்ற ஒரே ஒரு சகோதரனோடு ’மாநாடு’ என்ற திரைப்படத்தை தொடங்கினேன், ஆனால் இப்போது எனக்கு இலட்சக்கணக்கான சகோதரர்கள் இருக்கின்றனர் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்

சிம்பு நடித்துவரும் ’மாநாடு’ திரைப்படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகினர் மட்டுமின்றி லட்சக்கணக்கான ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதும் இவர்களில் பெரும்பாலானோர் சிம்பு ரசிகர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

லட்சக்கணக்கில் குவிந்த வாழ்த்துக்களால் திக்குமுக்காடிப் போன சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் நன்றியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நேற்றைய நாளை மிகச்‌ சிறப்பாக்கிய அன்பின்‌ சிம்புவும்‌... அவரது வெறித்தனமான ரசிகர்களுக்கும்‌ மனதின்‌ ஆழத்திலிருந்து நன்றிகள்‌. ’மாநாடு’ படத்தை சிலம்பரசன்‌ என்ற ஒரு சகோதரனோடு தான்‌ தொடங்கினேன்‌. ஆனால்‌ இன்று அவர்‌ எனக்குப்‌ பரிசளித்திருப்பதோ பல லட்சக்கணக்கான சகோதரர்களை. அத்தனை பேருக்கும்‌ மனப்பூர்வ நன்றிகள்‌. நன்றி மட்டும்‌ போதாது. ’மாநாடு’ நம்‌ ஒவ்வொருவருக்கும்‌ எவ்வளவு முக்கியம்‌ என்பதை அறிவேன்‌.

எத்தனை தடைகள்‌ வந்தாலும்‌ கடந்து மாநாட்டை வெற்றிப்படமாகத்‌ தருவதே, நான்‌ பதில்‌ செய்யும்‌ நன்றியாக இருக்க முடியும்‌. செய்வோம்‌. இணைந்தே வெல்வோம்‌. மிகப்‌ பெரிய நம்பிக்கையை ஒரு தயாரிப்பாளனான எனக்கு ஏற்படுத்தியுள்ளீர்கள்‌. இந்த டானிக்கை அருந்திய பலத்தோடு எதிர்‌ வரும்‌ நாட்களை அர்த்தமுள்ளதாக்கிக்‌ கொள்கிறேன்‌. நன்றி நன்றி

இவ்வாறு சுரேஷ் காமாட்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.