'விடாமுயற்சி' அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது? ரிலீஸ் எப்போது? சுரேஷ் சந்திரா கொடுத்த அப்டேட்..!
- IndiaGlitz, [Thursday,April 04 2024]
அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 60% மட்டுமே முடிவு அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது என்ற தகவலும் இல்லாத நிலையில் தற்போது இது குறித்த சில முக்கிய விவரங்களை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
’விடாமுயற்சி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் என்றும் அதற்குள் அனிருத் இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் சமீபத்தில் நாங்கள் வெளியிட்ட ’விடாமுயற்சி’ வீடியோ ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் எங்களுடைய கடினமான பணியை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என்றும் தெரிவித்தார்.
மேலும் இதுவரை 60% படப்பிடிப்பு முடிவடைந்ததற்காகவும் மீதி உள்ள படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த படத்தை அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து இந்த ஆண்டுக்குள் ’விடாமுயற்சி’ படம் ரிலீஸ் ஆகும் என்ற தகவலால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அஜித், த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணியை செய்து வருகின்றனர். மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.