தமிழகம் பின்பற்றி வரும் 69% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!
- IndiaGlitz, [Wednesday,March 03 2021]
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன மக்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி போன்ற இடஒதுக்கீடு முறைகளில் 69% இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதுபோன்ற நடைமுறை வேறு எந்த மாநிலங்களிலும் பின்பற்றப்பட வில்லை எனக்கூறி இந்த ஒதுக்கீடு முறையைக் குறித்து விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடுத்து உள்ளனர்.
மேலும் மகாராஷ்டிரா மாநிலம் பின்பற்றி வரும் ஓபிசி இடஒதுக்கீட்டு முறை குறித்த வழக்கு தற்போது அரசியல் சாசன அமர்வில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வழக்கோடு சேர்த்து தமிழகத்தின் இடஒதுக்கீட்டு வழக்கையும் அரசியல் சாசன அமர்வில் வைத்து விசாரிக்குமாறு சிலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதுகுறித்த விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி கொண்ட அமர்வு தமிழகத்தின் இடஒதுக்கீடு முறையானது குடியரசு தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு முறைப்படி வழங்கப்படுகிறது. இதனால் தமிழக அரசின் இடஒதுக்கீடு விவகாரத்தை அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றமுடியாது எனக் கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.
மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா பிரிவினரின் இட ஒதுக்கீடு தொடர்பான விசாரணை அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வருவதால் அவ்வழக்கின் தீர்ப்பு வெளியான பிறகு தமிழக அரசின் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.