டாஸ்மாக் வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
- IndiaGlitz, [Friday,May 15 2020]
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் மே 7-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் நிபந்தனைகள் கடைபிடிக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் கொடுத்தது.
இந்த நிலையில் மே 7 மற்றும் 8 ஆகிய இரண்டு தினங்களில் மட்டும் சுமார் 300 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை ஆகின. ஆனால் டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கவில்லை என்று கூறி உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்றும் இன்றும் நடந்த நிலையில் சற்று முன் இந்த வழக்கில் அதிரடியாக சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
இந்த உத்தரவில் தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் டாஸ்மாக் குறித்த வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடை திறக்கவிருந்த தடை நீங்கியதால் அனேகமாக நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.