நடிகை ஜெயப்ரதாவுக்கு 6 மாத சிறை தண்டனை.. மேல்முறையீட்டில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

  • IndiaGlitz, [Friday,December 15 2023]

தொழிலாளர்களின் இஎஸ்ஐ பணத்தை முறைகேடு செய்ததாக நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் இந்த தண்டனையை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் ’சலங்கை ஒலி’ ’நினைத்தாலே இனிக்கும்’ உள்பட பல தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை ஜெயப்பிரதா. இவருக்கு சென்னை அண்ணாசாலையில் சொந்தமாக திரையரங்கம் இருந்த நிலையில் அந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் இருந்து பிடிக்கப்பட்ட இஎஸ்ஐ தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் ஜெயப்பிரதா உள்பட மூன்று பேருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனை அடுத்து ஜெயப்பிரதா தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் சிறை தண்டனைக்காக ஜெயப்பிரதா சரணடைய வேண்டும் என்ற விதியில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிடப்பட்டது. மேலும் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டதோடு இஎஸ்ஐக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.