நடிகர் கவுண்டமணி நில விவகார வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

  • IndiaGlitz, [Tuesday,May 14 2024]

நடிகர் கவுண்டமணியின் நில விவகார வழக்கு கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் இந்த வழக்கில் முக்கிய உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கவுண்டமணி கடந்த 1998 ஆம் ஆண்டு கட்டுமான நிறுவனம் ஒன்றிடம் வணிக வளாகம் கட்டுவதற்கு தனக்கு சொந்தமான 2200 சதுர அடி நிலத்தை கொடுத்து அதில் 15 மாதங்களில் வணிக வளாக கட்டிட பணியை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்திருந்தார். இந்த பணிகளுக்காக அவர் ரூ.3.58 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தார் என்பதும் அதில் அவர் ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் வரை செலுத்தி விட்டதாகவும் தெரிகிறது.

ஆனால் கட்டுமான பணிகளை தொடங்காமல் அந்த நிறுவனம் இழுத்தடித்து வந்ததை அடுத்து நீதிமன்றத்தில் கவுண்டமணி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், கவுண்டமணியிடம் இருந்து பெற்ற நிலத்தை திரும்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கவுண்டமணி இடம் நிலத்தை ஒப்படைக்கும் நாள் வரை மாதம் ஒரு லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த கட்டுமான நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அதே நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் உச்சநீதிமன்றத்திலும் இன்று இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து 26 ஆண்டுகள் கழித்து கவுண்டமணிக்கு நீதி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.