பாகிஸ்தான் பிரதமர் திடீர் நீக்கம்! ராணுவம் கைக்கு செல்கிறதா ஆட்சி?
- IndiaGlitz, [Friday,July 28 2017]
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் அவ்வப்போது ராணுவம் ஆட்சியை கைப்பற்றி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன்னர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை பதவியில் இருந்து நீக்கி அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் அந்த நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான 'பனாமா லீக்ஸ்' விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பெயரும் இருந்தது. மேலும் ஷெரீபின் மகன்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்ததால் இதுகுறித்து நவாஸ் மீது பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முடிந்து சற்று முன்னர் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்ததோடு அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் திடீரென தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் புதிய பிரதமர் நியமனம் செய்யப்படுவாரா? அல்லது ராணுவம் ஆட்சியை கைப்பற்றுமா? என்பது குறித்த பரபரப்பில் பாகிஸ்தான் ஊடகங்கள் உள்ளன.