ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்
- IndiaGlitz, [Monday,January 23 2017]
சென்னை மெரீனா, மதுரை அலங்காநல்லூர் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனால் போராட்டம் செய்து வரும் மாணவர்கள் போராட்டத்தை நிறுத்திக்கொள்ளுமாறு அனைத்து தரப்பினர்களும் கேட்டுக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய சரித்திரத்தில் தங்க எழுத்துக்களால் எழுதக்கூடிய ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக ஒன்றுதிரண்ட மாணவ, மாணவியர்களும், இளைஞர்களும், தாய்குலமும், அனைத்து தமிழ் மக்களும் நடத்திய இதுவரைக்கும் வரலாறு கண்டறியாத அமைதியான, ஒழுக்கமான ஒரு அறவழி போராட்டத்தை நடத்தி உலகிலுள்ள அனைவரின் கவனத்தை ஈர்த்து பாராட்டை பெற்று வெற்றிமாலையணியும் இந்த நேரத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை பார்த்து நான் மிகவும் வேதனையடைகிறேன்
மத்திய, மாநில அரசாங்கத்திலிருந்தும், பெரிய பெரிய நீதியரசர்கள், வக்கீல்களிடமிருந்தும் நிரந்தர ஜல்லிக்கட்டிற்கு இவ்வளவு உறுதி கூறிய பின்பு அதற்கு கெளரவம் கொடுத்து, அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் கூறிய நாட்கள் வரைக்கும் அமைதி காப்பதுதான் கண்ணியமான செயலாகும்
இப்போது சில சமூக விரோத சக்திகள் இவ்வளவு போராடிய உங்கள் உழைப்பிற்கும், முயற்சிக்கும் நிங்கள் சம்பாதித்த நற்பெயருக்கும், இவ்வளவு நாட்கள் உங்கள் போராட்டத்திற்கு உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் இருந்த காவல்துறையினருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதற்கு நீங்கள் இடம் கொடுக்காமல் உடனே அமைதியாக இந்த அறவழி போராட்டத்தை முடித்து கொள்ளுமாறு நான் தாழ்மையுடனும் பணிவுடனும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.