'எனக்கு பிடிக்காத வார்த்தை 'வேலைநிறுத்தம்': பெப்சி பிரச்சனை குறித்து ரஜினிகாந்த்
- IndiaGlitz, [Wednesday,August 02 2017]
கடந்த சில நாட்களாகவே தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஃபெப்சி சம்மேளத்திற்கும் இடையே பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பேச்சுவார்த்தையிலும் சுமூகமான தீர்வு ஏற்படாததால், நேற்று முதல் பெப்சி தொழிலாளிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக ரஜினியின் 'கபாலி', விஜய்யின் 'மெர்சல் உள்பட சுமார் 40 படங்களின் படப்பிடிப்பு பாதிப்பு அடைந்துள்ளது. பெப்சி தொழிலாளர்கள் இல்லாமலும் படப்பிடிப்பு நடக்கும் என்ற தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷாலின் கருத்துக்கு பெப்சி சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு இருதரப்பினர்களும் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், தனக்கு பிடிக்காத வார்த்தை 'வேலைநிறுத்தம்' என்று அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது:
எனக்கு பிடிக்காத சில சொற்களில் 'வேலைநிறுத்தம்' என்பதும் ஒன்று. எந்த பிரச்சனையாக இருந்தாலும் சுயகெளரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளில் பேசி தீர்வு காணலாம். தயாரிப்பாளர் சங்கமும், பெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமூகமான தீர்வு காண வேண்டுமென்று முத்த கலைஞன் என்கின்ற முறையில் எனது அன்பான வேண்டுகோள்.