ரஜினிக்கு முதல்வராகும் தகுதி இல்லை: சுப்பிரமணியம் சுவாமி
- IndiaGlitz, [Friday,May 19 2017]
கடந்த ஒருவாரமாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற பேச்சே அனைத்து ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் டிரெண்ட் ஆகி வருகிறது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தமிழக அரசியலில் எளிதாக ஆட்சியை பிடித்துவிடலாம் என்று கனவு கண்டுகொண்டிருக்கும் ஒருசில கட்சி தலைவர்களுக்கு ரஜினியின் அரசியல் அறிவிப்பு இடியாய் இறங்கியுள்ளது. எனவே அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்றும், விருப்பம் இருந்தால் வரட்டும் என்றும், ஜனநாயக நாட்டில் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரட்டும் என்றும், பலர் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று ரசிகர்களிடையே உரையாடிய ரஜினிகாந்த் போர் வரும்போது பார்த்துக்கொள்வோம் என்றும், எதிர்ப்புகள் தான் நமது வளர்ச்சியின் உரம் என்றும் பரபரப்புடன் பேசினார். ரஜினியின் இன்றைய பேச்சு தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில் ரஜினிகாந்த் குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி அவர் அரசியலுக்கு வருவது குறித்து தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: ரஜினி ஒரு ஊழல் நடிகர் . அவர் அரசியலுக்கு வரக்கூடாது. ரஜினிக்கு அரசியல் பற்றிய அறிவு கிடையாது. முதல்வராக தகுதி அவருக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி தமிழர் இல்லை என நான் ஒருபோதும் கூறியதில்லை என்றும், அவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் என்று திமுகதான் பிரச்சினை கிளப்பியது என்றும் கூறியுள்ளார்.