'கோமாளி' சர்ச்சை காட்சியை ரஜினியே பாராட்டினார்: ஜெயம் ரவி
- IndiaGlitz, [Tuesday,August 06 2019]
ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த சர்ச்சை காட்சி ஒன்றுக்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த காட்சியை நீக்க இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் முடிவு செய்து இதுகுறித்த அறிவிப்பு ஒன்றையும் நேற்று வெளியிட்டனர். இந்த நிலையில் இதுகுறித்து ஜெயம் ரவி ஒரு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவடு:
‘கோமாளி’ திரைப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் அளித்த பேராதரவினால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். இந்த முன்னோட்டத்துக்கு மாபெரும் வரவேற்பைத் தந்த எனது ரசிகர்களுக்கும், என்னுடன் நடித்த நடிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இருப்பினும் அந்த முன்னோட்டத்தில் மரியாதைக்குரிய ரஜினி சார் தொடர்பான காட்சி, அவரின் ரசிகர்ளின் உணர்வுகளை துரதிர்ஷ்டவசமாகக் காயப்படுத்திவிட்டது. அந்த விஷயம் நேர்மறையாகச் சித்தரிப்பதற்காகவே சேர்க்கப்பட்டிருந்தது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
அவரது ரசிகர்களைப் போலவே, அவரது அரசியல் பிரவேசப் பயணத்தை மிக ஆவலுடனும், எதிர்பார்ப்புடனும், ரஜினி சாரின் அதி தீவிர ரசிகன் என்ற முறையில் காணக் காத்திருக்கிறேன். நாங்கள் அனைவரும் அவரது திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள். அப்படி இருக்கும்போது அவரையோ அவரது ரசிகர்களையோ எந்த விதத்திலும் அவமதிக்கும் எண்ணம் துளியும் எங்களுக்குக் கிடையாது.
ரஜினிகாந்த் ‘கோமாளி’ படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்துவிட்டு எங்கள் குழுவை மனமாரப் பாராட்டினார். எங்களது குழுவின் படைப்பாற்றல் திறனையும், அலாதியான கருத்தாக்கலையும் மனமாரப் பாராட்டினார். இருந்தபோதும், எந்த விதமான உள் நோக்கமும் இன்றி அமைக்கப்பட்டிருக்கும் அந்த காட்சியால் அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதற்கு மதிப்பளித்து, அக்காட்சியை படத்திலிருந்து நீக்க முடிவு செய்துள்ளோம்”.
இவ்வாறு ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.