ரஜினியை சந்திக்க வரும் ரசிகர்களுக்கு தலைவரின் அன்புக்கட்டளைகள்
- IndiaGlitz, [Friday,May 12 2017]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை கடந்த ஏப்ரல் மாதம் 12 முதல் 16 வரை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்த திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதை அடுத்து இம்மாதம் 15ஆம் தேதி ரசிகர்களை ரஜினி சந்திக்கவுள்ளார் என்பது அதிகாரபூர்வமான செய்தி.
முதல்கட்டமாக திருச்சி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், பாண்டிச்சேரி, காரைக்கால், கரூர், சிதம்பரம், பெரம்பலூர், திண்டுக்கல், திருவாரூர் உள்பட 17 மாவட்ட ரசிகர்களை ரஜினி சந்திக்கவுள்ளார். மாவட்டத்திற்கு 200 முதல் 250 ரசிகர்களை ரஜினியே தேர்வு செய்து அவர்களுக்கு ஐடி கார்டும் முறைப்படி ஸ்கேன் செய்து அனுப்பப்பட்டுள்ளது. இதேபோன்ற கார்டை போலியாக தயாரித்து ரஜினியை சந்திக்கமுடியாது. அது ஸ்கேனில் காட்டிக்கொடுத்துவிடும்
மேலும் தன்னை சந்திக்க வரும் ரசிகர்களை மே 15 அன்று காலை 7 மணிக்கே ராகவேந்திரா திருமண மண்டபத்தில் வருமாறு அறிவுறுத்தியுள்ளார். காலை சிற்றுண்டி முடிந்த பின்னர் 9 மணி முதல் ரசிகர்களை சந்திக்கும் ரஜினி அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்கிறார். மேலும் இந்த சந்திப்பின்போது ஆலோசனை, கலந்துரையாடல் என்று எந்த திட்டமும் கிடையாது. அதேபோல் ரசிகர்கள் யாரும் பரிசுப் பொருள்கள் கொடுப்பது, சால்வை போர்த்துவது, மாலை அணிவிப்பது ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது என்றும் குறிப்பாக, காலில் விழவே கூடாது என்பதும்தான் ரஜினியின் அன்புக் கட்டளையாம்.
'சிவாஜி' பட வெற்றிக்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரசிகர்களை ரஜினி சந்திப்பதால், இந்த சந்திப்பு மிகுந்த உணர்ச்சிமயமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.