சூப்பர் ஸ்டார் 'கபாலி'யும் புரமோஷன் சூப்பர் ஸ்டார் தாணுவும். ஒரு பார்வை
- IndiaGlitz, [Saturday,July 09 2016]
சூப்பர் ஸ்டார் ரஜினி படங்கள் என்றால் விளம்பரமே தேவையில்லை. ரஜினி நடிக்கின்றார் என்ற தகவலே மிகப்பெரிய புரமோஷனாக இருந்து வரும் நிலையில் 'கபாலி' படத்தின் தயாரிப்பாளர் செய்யும் பிரமாண்டமான புரமோஷன்கள் இந்த படத்தை உலக அளவில் பேச வைத்துவிட்டது.
'கோச்சடையான்', 'லிங்கா' ஆகிய படங்களுக்கு பின்னர் ரஜினி நடிக்கும் படம் 'கபாலி' என்பதால் ஆரம்பத்தில் ஓரளவுக்கே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் டீசர் வெளியான மே 1ஆம் தேதி இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி உறுதியாகிவிட்டது. 'கபாலி' டீசருக்கு கிடைத்த உலக அளவிலான வரவேற்பை பார்த்த தயாரிப்பாளர் தாணு மிகப்பெரிய அளவில் இந்த படத்தை புரமோஷன் செய்ய முடிவெடுத்தார்.
கலைப்புலி எஸ்.தாணு, இருபது வருடங்களுக்கு முன்பே புரமோஷன் கிங் என்ற பெயரை பெற்றவர். கடந்த 1995ஆம் ஆண்டு வெளிவந்த அர்ஜூன், நளினி மற்றும் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்த 'யார்' படத்திற்கு அப்போதே 24 ஷீட்டுக்கள் கொண்ட போஸ்டர் அடித்து அசத்தியவர். அந்த காலகட்டத்தில் 4 ஷீட்டுக்கள் கொண்ட போஸ்டர்தான் பெரிய ஸ்டார் படங்களுக்கே பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் விஜயகாந்த் நடித்த 'கூலிக்காரன்' படத்திற்காக பெரிய சைஸ் பேனர் செய்து அதை ரிக்சாவில் ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்பி வைத்தார். அந்த பேனர்களின் உயரத்தை பார்த்த ரசிகர்கள் பிரமிப்பு அடைந்தனர் என்பதை சொல்லவும் வேண்டுமா?
மேலும் உலக நாயகன் கமல்ஹாசனின் 'ஆளவந்தான்' படத்திற்காக ஒரே நாளில் 22 முழுப்பக்க விளம்பரங்களை கொடுத்து செய்தித்தாள்களில் கொடுத்து அனைவரையும் அசர வைத்தார். அதேபோல் இளையதளபதி விஜய்யின் 'சச்சின், விக்ரமின் 'கந்தசாமி' ஆகிய படங்களுக்கும் வித்தியாசமான புரமோஷன்களை செய்தார். இதற்கெல்லாம் மகுடம் வைத்ததுபோல் 'கபாலி' படத்தின் புரமோஷன் தற்போது நடைபெற்று வருகிறது.
தற்போது 'கபாலி' படத்திற்காக இதுவரை இல்லாத முறையில் தாணுவின் புரமோஷன் பணி இருந்தது. இதன்படி அவர் செய்து கொண்ட ஒப்பந்தம்தான் கபாலி-ஏர்ஆசியா விமான நிறுவனத்தின் ஒப்பந்தம். இதுவரை பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு கூட இம்மாதிரியான ஒரு புரமோஷன்கள் செய்ததில்லை. 'கபாலி' முதல் காட்சிக்கு சிறப்பு விமானம், ஏர் ஆசியாவின் பெரும்பாலான விமானங்களில் கபாலி'யின் கம்பீர போஸ்டர்கள் ஆகியவை உண்மையிலேயே வானத்தை தொட்டது புரமோஷன் பணி. மேலும் ஏர்டெல் நிறுவனம், ஃபைவ் ஸ்டார் நிறுவனம் ஆகியவற்றுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தால் புரமோஷன் பணி உச்சத்தை தொட்டது.
சென்னையின் மிகப்பெரிய புரமோஷன் மையம் என்று கூறப்படும் சத்யம் திரையரங்கின் முகப்பில் கடந்த நான்கு மாதங்களில் ஐந்துமுறை வெவ்வேறு பேனர்களை வைத்து அந்த பகுதி வழியான செல்பவர்களுக்கு வியப்பை அளித்துள்ளார் தாணு. மேலும் 'கபாலி' படம் ரிலீஸ் ஆன பின்னர் இந்த இடத்தில் அவர் தினம் ஒரு பிரமாண்டமான பேனர் வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கலைப்புலி எஸ்.தாணுவின் பிரமாண்ட புரமோஷன் ஆகியவற்றால் நிச்சயம் இந்த படத்தின் வசூல் வேறு எந்த படமும் தொட முடியாத உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.