அவருக்கு எதிராக பேச வேண்டிய நிலை ஏற்பட்டது: ஜெயலலிதா 75வது பிறந்த நாளில் வாழ்த்திய ரஜினிகாந்த்..!

  • IndiaGlitz, [Friday,February 24 2023]

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளை அதிமுகவினர் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பலர் கொண்டாடி வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மதிப்புக்குரிய அமரர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களுடைய 75 வது பிறந்த நாளில் வாழ்த்து தெரிவிக்கின்றேன். அவர்கள் இப்போது இல்லை என்ற வருத்தத்தையும் நினைவுபடுத்திக்கொள்கிறேன். ஜெயலலிதா போல இன்னொரு பெண்மணியை பார்க்கவே முடியாது, அவருடைய கம்பீரம், அறிவு, துணிச்சல், ஆளுமை யாருக்கும் இல்லை. எம்ஜிஆர் அவர்களுக்கு புரட்சி தலைவர் என்று பெயர் வந்ததற்கு காரணம் அனைவருக்கும் தெரியும், ஒரு நடிகராக இருந்து, ஒரு மாநிலத்தில் கட்சி ஆரம்பித்து, ஆட்சியைப் பிடித்து முதலமைச்சர் ஆனார். மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தினார் புரட்சித் தலைவர். அவருடைய மறைவுக்கு பிறகு அந்த கட்சி பிளவு பட்ட போது அந்த கட்சியிலே மிகப்பெரிய தலைவர்கள் இருக்கும்போது ஒரு பெண்மணி பிளவு பட்ட கட்சியை ஒன்றாக்கி, கட்சியை வலுவாக்கி பல ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்தார்.

இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களும் ஜெயலலிதா அவர்களை அவ்வளவு மதிப்பார்கள், அவருடைய திறமை பார்த்து பிரமித்தார்கள். ஒரு காலகட்டத்தில் எனக்கும் அவருக்கும் ஒரு மனஸ்தாபம் இருந்தது. அவருக்கு எதிராக நான் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதற்கு அப்புறம் என்னுடைய மகள் கல்யாணத்திற்கு அவரை அழைக்க போகும்போது அது எல்லாத்தையும் மறந்து என்னுடைய மகள் திருமணத்திற்கு வந்து ஆசி செய்தார். அவர் ஒரு மிகப்பெரிய கருணை உள்ள கொண்டவர், அவரது நாமம் வாழ்க’ என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.