திருப்பதி கோவில், கடப்பா தர்கா.. ஆன்மீக சுற்றுப்பயணம் செய்யும் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் கடப்பா ஆகிய பகுதிகளுக்கு ஆன்மீகச் சுற்றுலா சென்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருடங்களுக்கு பிறகு நேற்று இரவு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டதாகவும் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின.

ரஜினிகாந்துடன் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பதியில் ரஜினிகாந்த்தை பார்த்த அவரது ரசிகர்கள் அவரை நோக்கி ’தலைவா’ என கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது 6 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை வழிபட்டது மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் உதயநிதி அமைச்சரானது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் உதயநிதிக்கு தனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் திருப்பதியை அடுத்த இன்று காலை ரஜினிகாந்த் கடப்பாவில் உள்ள தர்காவிற்கு சென்றுள்ளார். ரஜினியுடன் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இந்த தர்காவுக்கு சென்று உள்ளதாக தெரிகிறது. ரஜினிகாந்த், ஏஆர் ரகுமான் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.