பணம், பெயர், பெரிய அரசியல்வாதியை பார்த்தவன் நான், ஆனாலும் சந்தோஷம் இல்லை: ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Saturday,July 23 2022]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, ‘பணம், புகழ் மற்றும் பெரிய பெரிய அரசியல்வாதிகளை நான் பார்த்தவன் என்றும் ஆனால் வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

‘என்னையும் பெரிய நடிகர் என்று இங்கு சொன்னார்கள், இது பாராட்டா திட்டா என எனக்கு தெரியவில்லை. நான் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்த படங்கள் ராகவேந்திரா மற்றும் பாபா.

இந்த இரு படங்கள் வெளியான பிறகு தான் மக்கள் பலருக்கும் ராகவேந்திரா மற்றும் பாபா பற்றி தெரியவந்தது. பாபா படத்திற்கு பிறகு நிறைய பேர் இமய மலைக்கு சென்றதாக சொன்னார்கள். என்னுடைய ரசிகர்கள் இந்த இயக்கத்தில் சன்னியாசியாக மாறியுள்ளனர். ஆனால் இன்னும் நான் நடிகராக இங்கே இருக்கிறேன்.

இமயமலையில் சில மூலிகைகள் கிடைக்கும் அதை சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கு தேவையான ஆற்றல், வைட்டமின் கிடைக்கும். இந்த உலகத்தை விட்டு செல்லும் போது சொத்தை சேர்த்து வைத்து செல்வதை விட நோயாளியாக இல்லாமல் செல்வது முக்கியம். நோயாளியாக இருந்தால் பிறருக்கு கஷ்டங்கள் ஏற்படலாம். இதனால் உடல் ஆரோக்கியம் ஒருவருக்கு ரொம்ப முக்கியம். இல்லையென்றால் சந்தோஷமாக மருத்துவமனை செல்லாமலேயே நடமாடி கொண்டிருக்கும் போது போய் சேர்ந்து விட வேண்டும். நான் கூட இரண்டு முறை மருத்துவமனை போய்ட்டு வந்தவன்.

பகுத்தறிவாளிகளுக்கு பகுத்தறிவாளர்கள் மேலை நாட்டை சேர்ந்தவர்கள். ஆனால், அந்த நாடுகளை சேர்ந்த அறிவியல் அறிஞர்களே பரமஹம்ச யோகானந்தாவின் க்ரியா யோகாவை ஏற்று கொண்டார்கள். பணம், புகழ், பெயர் உச்சி , பெரிய பெரிய அரசியல் வாதிகளை பார்த்தவன் நான். ஆனால் சந்தோஷம் நிம்மதி 10 சதவீதம் கூட இல்லை. ஏனென்றால் சந்தோஷம், நிம்மதி நிரந்தரம் கிடையாது’

மேலும் தனது ‘பாபா’ படம் குறித்தும் அந்த படத்தில் இடம்பெற்ற பட்டம் விடும் காட்சி குறித்தும் ரஜினிகாந்த் பேசினார். மேலும் இமயமலையில் உள்ள குகை, அங்கு தியானம் செய்தால் கிடைக்கும் நிம்மதி உள்பட பல விஷயங்களை அவர் தனது பேச்சில் தெரிவித்தார்.